குழந்தைகளுக்கு கதை சொல்வதென்பது மிகப்பெரிய வேலை. சொல்பவர்களும் குழந்தைகளின் மொழியிலேயே சொல்ல வேண்டும். அல்லது அவர்கள் குழந்ஹ்டைகளின் மனநிலைக்கு மாற வேண்டும். இல்லையென்றால் அந்தக்குழந்தை கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருக்காது.
நான் சிறுவனாக இருக்கும்போது சாயங்கால வேளைகளில் கதை கேட்போம். பெரும்பாலும் வயதான பாட்டிகள் அல்லது நடுத்தர வயதுப்பெண்கள் மிக்க ஆர்வமுடன் சொல்வார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாமே தெருவில் தான் நடக்கும். ரம்மியமான மாலைப்பொழுதுகள் எல்லாம் இப்படி கதை கேட்டு கழிந்திருக்கிறது.
அதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் பேசும் மொழி! அவர்கள் கதையைச்சொல்ல சொல்ல எங்களுக்கு ஆர்வம் அடங்காமல் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். அப்படி இருக்க வைத்தது அவர்கள் பேசும் குழந்தை மொழி. கதை சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இடைவெளி இருக்காது. அவர்கள் பெரும்பாலும் குழந்தை போல பேசுவார்கள். அல்லது அவர்கள் குழந்தையின் மனநிலையில் இருப்பார்கள். எந்த வார்த்தையும் புரியவில்லை என்று சொல்லமுடியாது. கச்சிதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மொழி ஆளுமை! இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்.
அதில் பெரும்பாலான கதைகள் பேய்க்கதைகள். ஒருவித பயத்தோடே கேட்டுகொண்டிருப்போம். ஒருவர் மீது ஒருவர் கை போட்டபடி அல்லது பிடித்தபடி கதை கேட்போம். அது ஒரு காலம். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை. நான் கதை கேட்டுத்தான் வளர்ந்தேன். ஆனால் என்னால் நல்ல கதை சொல்லியாக இருக்கவே முடியவில்லை.
இப்போது ஏன் இந்த விஷயம்திடீரென்று ஞாபகத்திற்கு வர வேண்டும்...காரணம் இருக்கிறது. இப்போதெல்லாம் என் குழந்தை அதியமான் கதை கேட்காமல் தூங்குவது இல்லை. தினமும் அவனுக்கு கதை சொல்ல வேண்டும். அவனுக்கு முயல், ஆமை, ஒட்டகம்,எலி,பூனை,நண்டு,முதலை இப்படி மிருகத்தின் கதை களை கேட்கப்பிடிக்கும். (இந்த பழக்கம் என் மனைவி உண்டாக்கியது.
தினமும் ஏதாவது இட்டுக்கட்டி நானே ஒரு கதியில் ஒரு நீதி வைத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மிருகம் என்று நாட்களை ஓட்டினேன். இதற்கு நடுவில் சில நாள் அவனே எனக்கு உருப்படியான கதைகள் கூட சொன்னதுண்டு. அவன் கதை சொல்லும் போது ஒரு விஷயம் ஆச்சர்யம் தந்தது. அவன் சொல்லும்போது நூல் பிடித்தது போல ஒவ்வொரு சம்பவத்தையும் கோர்வையாகச்சொன்னான். அது அந்தக்கால பாக்யராஜ் திரைக்கதை போல தெள்ளிய நீரோடையாக இருந்தது. அதையே நான் சொல்லும்போது இந்தக்கால பவர் ஸ்டார் போல இருந்தது. சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது. பல சமயங்களில் அவனே என்னிடம் "கதையை சரியா சொல்லுங்கப்பா" என்பான். இது ஒரு பெரிய தலைவலியாகவே இருந்தது.
என் பையனுக்கு ஒரு கதை கூட சரியாக சொல்ல முடியாத நான், (அதுவும் அவனுக்குப்பிடிததது போல) ஒரு நிறுவனத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வர்களை சமாளித்து என்ன பிரயோஜனம்...!? கதை சொல்வது அதுவும் குழந்தைக்கு கதை சொல்வது ஒரு மிகப்பெரிய சவால்! இதை எப்படி எதிர்கொள்வது என்பதிலேயே பல இரவுகள் யோசனையிலேயே கழிந்தது.
அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. எந்தக்கதையை ஆரம்பித்தாலும் "ஒரு ஊர்ல"என்றுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி சொல்லாமல் விட்டால் "ஒரு ஊர்லன்னு" சொல்லுங்கப்பா என்பான். கதையை ஆரம்பித்து சொல்லி முடிப்பதற்குள் அவன் நிறைய கேள்விகள் கேட்டிருப்பான். ஏன் என்றால் நிறைய வார்த்தைகள் அவனுக்குப்புரிந்திருக்க நியாயமில்லை!
ஒரு நாள் அவனுக்கு மனிதர்களின் கதையைச்சொல்லலாமே என்று ஒருவரைப்பற்றி அவரின் உழைப்பைப்பற்றி விளக்கினேன் இப்படி: "அவர் பம்பரமா உழைச்சாரு" என்றேன். அந்தக்கதையை முடிக்கும் போது அவன் கேட்டது இது: அவரு பம்பரமா இருந்து எப்போ மனுஷங்களா மாறினாரு".
நான் சிறுவனாக இருக்கும்போது கதை சொன்ன அத்தனை பேரையும் மிகப்பெரிய மரியாதையோடு நினைத்துக்கொண்டேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக