சனி, பிப்ரவரி 05, 2011

இதற்கு முன்பும் இதற்குப்பிறகும் -மனுஷ்யபுத்திரன் -ஒரு மதிப்புரை!


மனுஷ்யபுத்திரனின் "இதற்கு முன்பும் இதற்குப்பிறகும்" படித்தேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக படித்துக்கொண்டிருந்தேன்.  மனுஷ்யபுத்திரன் ஏற்கனவே எனக்கு அறிமுகம் இருந்தாலும் நான் வாசித்த அவருடைய முதல் கவிதைத்தொகுதி இது. எனக்கு உலக இலக்கியம் தெரியாது. அதைப்பற்றிய எந்த அறிவும் கிடையாது. ரஷ்ய இலக்கியங்களில் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. மற்றபடி என் பதினைந்து ஆண்டு கால வாசிப்பு என்பது தமிழ் இலக்கியங்கள் மட்டுமே. 
என்னைக்கேட்டால் தமிழ் இலக்கிய வாசிப்பு என்பது உலக இலக்கிய வாசிப்புக்கு நிகரானது.அதுவும் மனுஷின் இந்தத்தொகுதியில் உலக வாழ்க்கை மொத்தமும் காணக்கிடைக்கிறது.
சில பேருக்கு சில கவிதைகள் புரிவதும் புரிந்து கொள்ளமுடியாமல் போவதும் அவரவர் வாழ்பனுபாத்தைச்சார்ந்த்தது. அதே போலத்தான் இதிலும் பல கவிதைகள் என் அனுபவமாகப்பார்க்கிறேன், சில கவிதைகள் புரியாமல் போவதற்கு ஒன்று நான் அதை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்  அல்லது அந்த சம்பவங்களில்  எனக்குப்பரிச்சயமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது மனுஷின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நான் திணறி இருக்கலாம். ஆக  இதை எல்லாம் மனதில் கொண்டு மனுஷின் இந்தக்கவிதைத்தொகுதியை  என் மன ஓட்டங்களுக்கு ஏற்ப எப்படி இருந்தது என்று சொல்ல முற்படுவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

நூற்று இருபத்தாறு கவிதைகள். நூற்று இருபத்தாறு வெவ்வேறு வகையான வாழ்க்கைகள். அந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதற்குள் எப்படியான வேதனைகளை ஒரு கவிஞன் அனுபவித்திருப்பான் என்பதை என்னால் உணர முடிகிறது.  "எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும் "     என்று ஆரம்பிக்கும் போதே  வந்து விழுந்து விடுகிறது நம் மனதின் அழுக்குகளும். நாம் எப்போதும் அடுத்தவர்களின் கதையை ஆர்வமாகக்கேட்பவர்கள். ஆனால் நம் கதைகளை நாம் ரகசியமாக வைத்திருப்போம்...
   காரணங்கள் உனக்கு
  தெரியத்தான் வேண்டுமா
                ஒரு வழிப்போக்கனின் பாதையில் 
                எங்கிருந்தோ கேட்கும் 
                தீனமான அழுகுரல்கள் பற்றி 
  
              எல்லாக்குளிர் காலங்களிலும் 
             தவறாமல் ஏற்படும் 
            மன நோய் பற்றி 

          கைவிடப்பட்ட ஒரு வீட்டின் 
          திறந்து கிடக்கும் 
          எல்லா வாயில்களும் பற்றி 

          தழும்பும் இரு முலைகளுக்கு நடுவே 
          பார்க்க நேரும் 
          ஒரு நீளமான தீக்காய வடு பற்றி 
எல்லாவற்றிற்கும் பின்னே 
ஒரு கதை இருக்கும் 

என்று முதல் கவிதையை படிக்கும் போதே  'இது நமக்கும் மிகத்தெரிந்ததாய் இருக்கிறதே, இந்த வாழ்க்கை நம்முடையதாக  இருக்கிறதே' என்ற எண்ணத்தை தோன்ற வைத்துவிடுகிறார் மனுஷ்.  எனவே மறுபடி மறுபடி இந்த வாசகங்கள் நம்மைப்படிக்கத்தூண்டுகின்றன. 
 இந்தக்கவிதைத்தொகுதியில்    கவிதைக்கட்டமைப்பு மிக நுட்பமாக இருக்கிறது. அதன் தோற்றம், வடிவம், சிந்தனை மயக்க வைக்கிறது. இந்த நுட்பம் மலைக்க வைக்கிறது. படிக்கப்படிக்க   
   நாமும் அவர் காட்டும் உலகத்திற்கு மிகச்சுலபமாய் போய் வர முடிகிறது.  
   "பணி நீக்க உத்தரவு" படித்தபோது மிக அழுத்தமாய் உணர முடிகிறது இது மனுஷின் மிக நெருங்கிய  நண்பரோ அல்லது உறவுக்காரருடைய அனுபவமோ. 
 தன்னைப்போல 
யாராவது ஒருவர் 
நாளைக்காலை 
இதே பாதையில் வரத்தேவை அற்றவர்கள் 
இருக்கிறார்களா 
என ஒவ்வொரு முகமாக உற்றுப்பார்க்கிறாள்'  இந்த உணர்வை வாழ்நாளில் பலமுறை அனுபவித்ததுண்டு வேறு சம்பவங்களோடு. இப்படி படித்துக்கொண்டிருக்கும்போதே இந்த ஆள் எல்லாவற்றையும் எல்லாருடைய வாழக்கையையும் இந்த ஒரு தொகுதியில் முடித்துவிட்டாரோ  என்ற ஆச்சர்யம் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

நினைத்துப்பார்ப்பதன் விலையை 
யாரும் செலுத்தத்தயாரில்லாத
ஒரு காலத்தில் 
அல்லது 
மறதி மிக மிக மலிவாகக்கிடைக்கும் 
ஒரு காலத்தில் 

உனக்கு இதை 
நினைவூட்டுதல் 
கொஞ்சம் அவமானகரமானது'
"நினைவூட்டல்களின்  காலம்"  இந்தக்கவிதை படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க யோசித்துக்கொண்டிருந்தேன்.  இதை நாம் எந்த விஷயத்தொடும் சம்பத்தபடுத்திப்பார்க்கலாம். கவிஞன் எந்த மன நிலையில் எழுதி இருந்தாலும் அது வாசகன் பயன் பாட்டுக்கு வரும்போது எந்த வித வடிவமும் எடுத்துக்கொள்ளலாம். இந்தக்கவிதை இன்னார் எழுதியதைப்போல அல்லது அதை விட மேலாய் என்று ஒப்பிட எனக்கு உலகளாவிய கவிஞர்களோடு அவ்வளவு பரிச்சயமில்லை என்பது இப்போது எனக்கு சவுகரியமாய் இருக்கிறது. ஏனெனில் யாரோடும் நான் ஒப்பிட விரும்பவில்லை இவரின் கவிதைகளை. இந்த ஒப்பிடும் வேலையை மேலை நாடுகள் நம் தமிழோடு செய்யும் காலம் வந்தால்  நன்றாக இருக்கும் எழுத்தாளர் சாரு சொல்வதைப்போல.  அதற்கு நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச்செய்யாமல் போனால் நிச்சயம் நம்மை காணாமல் அடித்து விடுவார்கள்.
"ஒரு சுடரை வைத்துக்கொண்டு " மிக அழகாய் பாடம் கற்றுக்கொடுக்கிறார் அல்லது பாடம் கற்றுக்கொள்கிறார். அழகான ஆழ்ந்த  சிந்தனை.
"ஒரு சுடரை எப்படி 
குளிக்க  வைப்பது என்றுதான்
எனக்குப்புரியவே இல்லை 
ஒரு சுடர் அழுக்கடைய மறுப்பது 
ஒருபோதும் வியர்வை நாற்றமில்லாதிருப்பது 
என்னை அமைதி இழக்க வைக்கிறது"
இதைப்படித்து விட்டு நீங்கள் அடுத்த வரிக்குப்போக குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாகும்.  

"விடிந்ததும் எல்லாம் சரியாகி விடும்"  - இது ஒரு சுய தரிசனம். எத்தனையோ பெரிய பெரிய சோகங்கள் எல்லாம் தூங்கி எழுந்ததும் தானாக சரியாகவில்லையா , யார் இறந்தாலும் இருந்தாலும் அடுத்த வேளை பசி எடுப்பதில்லையா? அது போல விடிந்ததும் எல்லாம் சரியாகி விடும் என்ற பொது வாக்கில் எழுதப்பட்ட ஒன்று.
"நாம் ஏன் இப்படி இருக்கிறோம்" இந்தத்தொகுதியின் ஆகச்சிறந்த கவிதையாக எனக்குப்படுகிறது.
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு 
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு 
கண்ணாடியின் முன் சுய மைதுனம் செய்துகொண்டு 
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன 
என்று எப்போதும் யோசித்துக்கொண்டு 
பொறுக்கிகளுக்கு பயந்து கொண்டு 
புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய் 
தெரிந்து கொண்டு 
சதா ஏதேனும் நோயைப்பற்றி பேசிக்கொண்டு 
எப்போதும் பருவ நிலையினைப்பற்றி புகார் 
செய்துகொண்டு" எத்தனை யதார்த்தம், உண்மை இந்த வரிகளில்.முகத்தில் வந்து அறைந்த இந்த  மிக  நீண்ட  கவிதையைப்படித்து முடித்த பின் எதுவுமே செய்யத்தோன்றவில்லை.    
இதில் ஏதாவது ஒன்றை நம்மால் மாற்ற முடிந்ததா அலல்து நாம் மாற முயன்றிருக்கிறோமா என்ற கவலை அதிகமாய் இருந்தது.  இதில் எல்லாமே இருக்கிறது. நாம் இப்படித்தான் இருக்கிறோம். இருந்தோம். இருப்போம். கவிதையின் முடிவில் 
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று 
நினைத்துக்கொண்டு 
எப்போதோ நன்றாக இருப்போம் என்று
நினைத்துக்கொண்டு
சாதாரனமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு 
மன்னிக்க முடியாதவற்றை 
மன்னித்துக்கொண்டு "... ஆமாம்..நாம் இப்படித்தான் இருக்கிறோம். ஒரு யோகியின் தரிசனம் போலத்தான் இருக்கிறது. 
"தற்கொலை செய்து கொண்டவளின் கணவன்" - மிகச்சிறந்த திரைக்கதையைப்போல இருக்கிறது. வித்தியாசமான வடிவம்.
"யாரோ கவனிக்கும்போது" நாம் நிச்சயமாய் நம் சுதந்திரத்தை ஒரு கணமாவது இழந்திருப்போம். அதைதான் சொல்கிறது இந்தக்கவிதை.
அதோடு நையாண்டியும் சமூகத்தின் அவலங்களும் நம் கண் முன்னே விரிகிறது. 
"மாம்சத்தின் வாள்" புரிந்தது போலும் உள்ளது புரியாதது போலும் உள்ளது. "திறப்பு" நம் மனதைத்திறந்து பார்க்க உதவுகிறது. பூட்டைக்கொண்டு எதைத்திறக்கலாம்...கைவிலங்கு? கால்விலங்கு ..வேறென்ன திறக்கலாம்..ஒரு கற்பு ..ஒரு கனவு...இன்னும் இருக்கிறது திறக்க அல்லது நாம் தேடிக்கண்டுபிடிக்க.
     இப்படி இந்தத்தொகுதி முழுக்க நாம் தேடிக்கண்டு பிடிக்க, கண்டடைய நிறைய தரிசனம் நமக்குக்காத்திருக்கிறது. 
   பிரபல மனிதனின் விதவை, சுழலும் தலை,ஒரு காதலைத்தெரிவிக்கும்  போது, உடல் வாசனை, உன் தோல்வியின் சரித்திரம்,ஒரு உரிமை நிலை நாட்டப்படும்போது,பிம்பம், 
  ஒன்று முடிவுக்கு வரும்போது இப்படி கவிதைத் தொகுதி எங்கும் வாழ்க்கையின் தரிசனங்கள். நாம் சந்திக்க நேரும் மனிதர்கள், அவர்களின் அனுபவங்கள், நம்முடைய மனதின் அதிசயங்கள் எல்லாம் இருக்கிறது !     
  எதை எதையோ பல்கலைகழகங்கள் பாடமாக வைக்கின்றன...இந்தத்தொகுதியும் இருந்தால் இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வு  வரும்!  
"முறிந்த கடவுள்" கவிதையில்  - அவன் அஞ்சுகிறான் 
                                                 கடவுள் இல்லாத 
                                                 உலகத்தைப்போலவே 
                                                கடவுள்கள் நிறைந்த உலகத்திடம்"  -  இதற்கு நான் எண்ண புதிய விமர்சனம் அல்லது மதிப்புரை தந்து விட முடியும்?

"அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன்" - வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டது என்றாலும் அதன் உண்மையும் அரசியலும் இன்னும் மாறவில்லை என்பதற்கு சாட்சி.

இந்தப்புத்தகம்  மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை எனக்குக்கொடுத்தது. உங்களுக்கும் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.

 இங்கே மேற்கோள் காட்டி இருப்பது ஒரு சில மட்டுமே. நமக்கு இன்னும் பல வாழ்க்கையின் தரிசனங்கள் உள்ளே  காத்திருக்கின்றன.  இந்தக்கட்டுரையை முடிப்பதற்கு முன் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே. 

நம் எல்லோருக்கும் சினிமா பார்ப்பதற்கு, இன்டர்நெட்டில் அரட்டை அடிப்பதற்கு,  நாள் முழுக்க  பேஸ்புக்கில் எதையாவது தேடிக்கொண்டு இருப்பதற்கு,  நிமிடத்துக்கு ஒருமுறை கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொண்டு இருப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறது. ஆனால் ஒரு நல்ல புத்தகம் படிக்க நாம் சொல்லும் காரணம்  "எனக்கு நேரமில்லை" என்று!



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

"naam yen ippadi irukirome?" endra kurunthalaipin keezh oru vaakiyam. 'eppotho nandraga irunthome endru ninaithukondu eppotho nandraga irupome..' endru sellum edathil 'eppotho nandraga irupome' enbathu siru nerudalaga irukirathu!

வலைப்பதிவு காப்பகம்