ஒரு வலி மிகுந்த நாளில்தான் நான் அதீதத்தின் ருசியைப்படிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் என் பிள்ளை ஒரு மருத்துவ மனையில் ...இன்னொரு பக்கம் என் தந்தை ஒரு மருத்துவமனையில்! இந்த இரண்டு மருத்துவமனைக்கும் நடந்து நடந்து தூக்கமே இல்லாமல் போன இரவுகளுக்கிடையில் இந்தக்கவிதைகளை வாசிக்கத்தொடங்கினேன்.
அதீதத்தின் வலியில் இருந்தபோது இந்த அதீதத்தின் ருசி எனக்கு ஆறுதல் கொடுத்தது. வலி தாங்கித்தாங்கி மனம் மரத்துப்போன வேளையில் கொஞ்சம் இதம் கொடுத்தது.
கடவுளிடம் என் மனக்குமுறலைச்சொல்லி முறையிட்டபோது அவர் எனக்கு அதீதத்தின் ருசியைப்பருகச்சொன்னதாகவே இப்போது எனக்குப்படுகிறது. உண்மையில் இதைப்படிக்க ஆரம்பித்ததிலிருந்து என் வலியை ஒதுக்கி வைத்தேன். அதை எட்ட நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஒரு தியானம்போல அந்த வலியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் அந்த வலியே எனக்கு மருந்தாகிப்போனது. இதற்கு முதலில் நான் மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு கவிதையும் என் வலியை மறக்கடிக்கச்செய்தது. இதை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் எழுத்தின் வீச்சு. அது கொடுக்கும் தைரியம். அது கொடுக்கும் ஒரு பறந்து பட்ட நிலை. மனம் விரிந்து நம் வலியோ துயரமோ, சந்தோஷமோ துக்கமோ எல்லாம் ஒன்றுதான் என்ற சம நிலைக்குத்தள்ளும் ஒரு சக்தி எழுத்துக்கு உண்டு என்பதை மறுபடி உணர்த்தியது. கீதை சொல்லும் பாடமும் இதுதான். அதையும் ஒருவர் எழுதித்தானே நாம் படிக்கிறோம்...!
என் சுய புராணம் தாண்டி(அதனால்தான் இதை ஒரு பகிர்வு என்றேன்...) இப்போது அதீதத்தின் ருசிக்குச்செல்வோம்.
"நடனத்திற்குப்பிறகு" என்ற மனுஷ்யபுத்திரனின் முன்னுரையைப்படிக்கும்போதே ஒரு வித காட்சிப்படிமம் நம் மனதுள் வந்து போவதைத்தவிர்க்கமுடியவில்லை. " ஒரு சிறிய இடைவெளியில் மூன்று பருவங்களுக்கு உடலையும் மனதையும் ஆயத்தப்படுத்திக்கொள்ளும்போது பருவங்களைப்பற்றிய குழப்பமே மிஞ்சுகிறது" என்று சொல்லும்போதே நாம் பேச முற்படும்போதே அதை அவர் பதிவு செய்யும் விதம் அழகு.
அவரே அந்த முன்னுரையில் " இந்தக்கவிதைகள் எழுதப்பட்ட கடந்த ஏழு மாதங்களில் நான் வெவ்வேறு மனங்கள் ஆகவும் உடல்களாகவும் இடங்களாகவும் இருந்ததாகவே இப்போது தோன்றுகிறது" என்று தன் கவிதை உலகம் பற்றி பகிர்ந்து கொள்கிறார். முன்னுரை அந்தத்தொகுப்பின் கடந்து போன வரலாற்றை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. இந்தத்தொகுப்பை அவர் தன் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். மொத்தம் எண்பத்தைந்து கவிதைகள்.
இந்த உலகத்தில் எல்லாரும் எல்லாமும் அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அனுபவத்தின் பதிவுகளை அல்லது பகிர்தலை நுகர்ந்தாலே அவரவர் வாழ்க்கைக்குத்தேவையான எல்லா அம்சங்களையும் அவரவர் விருப்பம்போல எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முன் அனுபவத்தின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் கவியரசு கண்ணதாசன். ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கோ பயன்படாத எழுத்து காலம் கடந்து நிற்பதில்லை. அப்படி காலம் கடந்து நிற்கும் எழுத்துக்களை நாம்தான் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை தனி மனித முன்னேற்றமே ஒரு சமூகத்தின் முன்னேற்றமாகும். அதை முன்னிறுத்தும் எழுத்துதான் மனுஷ்யபுத்திரனின் எழுத்து.
இந்தத்தொகுதியில் உள்ள அனைத்துக்கவிதைகளுமே எனக்குப்பிடித்திருந்தது என்றோ அல்லது புரிந்து விட்டது என்றோ சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம். ஆனால் பெரும்பாலான கவிதைகள் எனக்குப்பிடித்திருந்தது அல்லது புரிந்திருக்கிறது . இருந்தாலும் கவிதை தன்னை எழுதிக்கொள்ளும்போது அந்தத்தருணம் சத்தியம் , உண்மை என்பதால் அவனுடைய எல்லா எழுத்துக்களும் உண்மையே . உண்மை எப்போதும் அழகுதான்.
அப்படிப்பட்ட ஒரு அழகுதான் இந்த எல்லாக்கவிதைகளும்.
----தொடரும்....!
அப்படிப்பட்ட ஒரு அழகுதான் இந்த எல்லாக்கவிதைகளும்.
----தொடரும்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக