குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது சாதாரணமான விஷயம் என்றே இது நாள் வரை எண்ணி இருந்தேன். அது எத்தனை தவறான புரிதல் என்று நேற்று முதல் தெரிந்து விட்டது.
காலை ஏழு மணிக்கு குழந்தையை எழுப்பி அதனிடம் நாலு நல்ல வார்த்தை பேசி தூக்கம் தெளிவதற்கு ஏதாவது சொல்லி முதலில் பல் துலக்குவதில் இருந்து ஆரம்பித்து கழுத்தில் அடையாள அட்டை மாட்டுவது வரை கொஞ்சம் கூட ஆசுவாசப்படுத்தக்கூட நேரமில்லாமல் ....அப்பப்பா! ஆயாசமாகிவிடுகிறது!
பல் துலக்கி முடிந்ததும் குளிக்க வைக்க வேண்டும். இப்போதெல்லாம் அவனே குளித்துக்கொள்வதால் அது வேறு பிரச்சினை. அரை மணி நேரம் குளிப்பான். அதற்குள் அடுப்பில் பால் வைக்க வேண்டும். காலை சாப்பிட ஏதாவது தயார் செய்ய வேண்டும். இந்த நேரத்திற்குள் அவன் குளித்து விட்டானா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் வீடு முழுக்க தண்ணீர் தேசமாகி விடும்.
இதற்கிடையில் எதுவும் மறக்காமல் இருக்க வேண்டுமே...இந்த இரண்டு நாளில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மறந்து விட்டது. நேற்று அவனுக்கு மருந்து கொடுக்க மறந்து கொடுக்க மறந்து விட்டேன் ...என்று பிஸ்கட் எடுத்து வைக்க மறந்து விட்டேன். இதில் என்ன ஒரு கொடுமை என்றால் நாளைக்கு எதுவும் மறந்து விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டே வேலை செய்தால் இரண்டு மூன்று
விஷயங்கள் மறந்து ஒருவித படபடப்பு வந்து தொலைத்துவிடுகிறது.
இரண்டு நாளில் நான் சாப்பிடக்கூட மறந்து விடுகிறேன். குழந்தைக்கு எதுவும் மறக்காமல் செய்ய வேண்டுமே என்கிற அக்கறை செயலில் வரும் போது மனம் சோர்ந்து உடலும் சோர்ந்து விடுகிறது. அவனை வேனில் ஏற்றி அனுப்பிவிட்டும் கூட ஏதாவது மறந்து விட்டோமோ அல்லது செய்வதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று மனம் பதைப்பதை தடுக்கவே முடியவில்லை.
இதற்குள் நடு முதுகு வலி பின்னி எடுத்து விடுகிறது. மறுபடி இதே வேலை பள்ளி முடித்து வீடு திரும்பும்போதும் தொடரும். பள்ளி அனுப்பும்போது இருக்கும் அக்கறையை விட இப்போது நாலு மடங்கு இருந்தால்தான் அவனை சமாளிக்க மிடியும். இல்லை என்றால் சாப்பிடவே மாட்டான். உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கி விடுவான்.
ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வதற்கே இப்படி என்றால் தினமும் அவனையும் என்னையும் கவனித்து எனக்கும் மதியம் சாப்பாடு எடுத்து வைத்து ஒன்றுமே நடக்காதது போல இருப்பாளே என் மனைவி ....ஆச்சர்யம் தாங்காமல் அழக்கூட வைத்து விடுகிறாள்.
பாரதிதாசன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை....தலை வாரி பூச்சூடி உன்னை பள்ளிக்கு அனுப்புவாள் உன் அன்னை! ஆம்...அன்னை மட்டுமே அப்படி அனுப்ப முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக