வெள்ளி, ஜூலை 01, 2011

இலக்கியவாதிகளின் சண்டைகளும் இளிச்சவாய் வாசகர்களும்!


பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல்  இருக்கிறது எப்போதும் போல நம் தமிழ் இலக்கிய சூழல். அவருக்கு இவர் பதில் சொல்லி, இவருக்கு அவர் பதில் சொல்லி இப்படி சொல்லிச்சொல்லியே  வாசகர்களை பரபரப்பாய் வைத்திருப்பார்கள் நம் இலக்கியவாதிகள். வாசகர்களும் பாவம் இரு குழுவாய் பிரிந்து, சினிமா ரசிகர் மன்றத்தினர் போல் செயல்படுவார்கள். பல சமயம் சினிமா ரசிகர் மன்றத்தினரைக்கூட இவர்கள் தோற்கடித்துவிடுவார்கள். எல்லாம் எழுத்து செய்யும் மாய வித்தை.அவ்வளவு ஆபாசம் இருக்கும் அதில். 
  ஆனால் அவர்கள் பேசாத இலக்கியம் இருக்காது தத்துவம் இருக்காது.  மனித நேயம் இருக்காது. இவர்கள் சினிமா கதாநாயகனை மிகக்கடுமையாய் விமர்சிப்பார்கள். அவரது ரசிகர்களைப்பற்றி கேவலமாய் சாடுவார்கள். 
ஆனால் எழுத்தாளர்களுக்குள் சண்டை வந்து விட்டால் அதுவும் வீதிக்கு வந்து விட்டால் சகிக்க முடியாது. அவர்கள் எழுதும் எழுத்தை குடும்பத்தோடு உட்கார்ந்து வாசிக்க முடியாது. அவ்வளவு ஆபாசமாய் இருக்கும் அவர்கள் சண்டை இடும் கலாச்சாரம். 

முன்பெல்லாம் இப்படி இலக்கியவாதிகளுக்குள் மோதல் வந்து விட்டால் எதிர்வினைக்கு வாசகர்கள் ஒரு நாளோ அல்லது வாரமோ காத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. social network அல்லது தத்தமது வெப்சைட் மூலமாக உடனுக்குடன் சண்டைக்காட்சிகளை  அரங்கேற்றி  விடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் வைத்திருக்கும் ஆதாரங்களோடு முச்சந்திக்கு வந்து விடுகிறார்கள். அதற்கு அவர்கள் வாசகர்களாகிய தீவிரவாதிகளின் அர்த்தமில்லாத கமெண்ட் வேறு. இதையெல்லாம் பார்க்கும் போது சினிமா ரசிகர் மன்றங்கள் எவ்வளவோ தேவலாம். சில சமயம் அவர்கள் நற்பணிகளாவது  செய்கிறார்கள். 


இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோருமே தங்களை ஏதோ வேற்று  கிரகத்தில் இருந்து வந்திருப்பவர்கள் போலவும் அவர்களுக்கு தமிழ் நாட்டில் பிறந்த எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வில்லை என்றால் ஆள் வைத்து அடித்து விடுபவர்கள்  போலவும் பார்க்கிறார்கள். இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் தமிழுக்கு அலது தமிழ் சமூகத்துக்கு. தெரியாது. வாசகர்களுக்கும் தெரியாது.

இந்த வெற்றுக்கூச்ச்சலும் ஆள் ஆளுக்கு தங்களுக்குத்தேரிந்த  எழுத்து நடையில் திட்டித்தீர்த்துக்கொள்வதும் சகிக்க முடியவில்லை. இதனால்தானோ என்னவோ இவர்களின் எழுத்தைப்படிக்கவோ  இவர்களின் கூட்டங்களுக்குச்செல்லவோ அதிகமாய் ஆள் இல்லை. இப்படி இருக்க, நல்ல தமிழ் நூல்களை தேடித்தேடி வாசிக்கும்  பழக்கமும் வழக்கமும் அருகிப்போன இக்காலத்தில் அதற்குண்டான சாத்தியக்கூறுகளுக்கு எதுவும் உதவாமல் தனது தனிப்பட்ட கருத்துகளுக்காக அல்லது காரணங்களுக்காக எழுத்தாளர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதும் எதனால் வளர்ந்தார்களோ எந்த தமிழ் எழுத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்களோ அதே தமிழை வைத்து அடுத்தவர்களை இழிவாகப்பேசுவதும் தூற்றுவதும் அப்பப்பா...அந்த எழுத்தைப்படிக்கக்கூட மனம் கூசுகிறது.

அரசியல் ஒரு சாக்கடை என்பது போல இலக்கியமும் அதைக்கொன்டாடும் ஒரு கூட்டமும் ஒரு சாக்கடை தான் போல என்பதே இன்றைய இளைஞர்களின் கூற்றாக உள்ளது.
கண்ணதாசன் அவரைப்பற்றி சொல்லும்போது "எழுத்தாளனைப்பின்பற்றாதே--எழுத்தைப்பின்பற்று" என்பார். அப்படிச்சொல்வதற்குக்கூட ஒரு தகுதி வேண்டும். இதில் இருந்து ஒரு விஷயம் நாம் உணரலாம். எழுத்தும் ஒரு வியாபாரமே. அதுவும் ஒரு பண்ட மாற்றே. அதுவும் ஒரு தந்திரமே. இந்த எழுத்தாளர்கள் சப்பைக்கட்டு கட்டுவது போல "இது என் உதிரம். இது என் ஆன்மா" என்பது போன்ற அபத்தம் அல்ல அவர்களின் எழுத்து. அப்படி ஆன்மாவில் இருந்து எழுதுபவர்கள் அசிங்கமாகவோ அல்லது ஆபாசமாகவோ எழுத மாட்டார்கள்.
முக்கியமாக சண்டையிட மாட்டார்கள்.முஷ்டி மடக்கி தெருவில் இறங்க  மாட்டார்கள்.

எல்லாவற்றையும் கற்றுத்தரும்(வாசகர்களுக்கு) அவர்கள் எதை பின்பற்றுகிறார்கள்? என்ன கோட்பாடு? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எல்லாரையும் திட்ட வேண்டும் எல்லாவற்றையும் திட்டவேண்டும். நான் கல்லூரி விடுதியில் படிக்கும்போது ஒரு நண்பன் எபோதும் ஒரு வார்த்தையை உபயோகப்படுத்துவான்.
"இந்த சாப்பாட்டை மனிஷன் தின்பானா" என்பான், அதை சாப்பிட்டுக்கொண்டே. அது போலத்தான் இருக்கிறது இந்த இலக்கிய வாதிகளின் சண்டைகளும்! 

நல்ல வேலை எழுத்தை ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்க வில்லை. இல்லையெனில் நான் இந்நேரம் யாருடனோ எதற்காகவோ காரணமே 
இல்லாமல் சண்டை போட்டுக்கொண்டு இருந்திருப்பேன்.  எல்லாரையும் திட்டித்தீர்த்திருப்பேன். "நான் யார் தெரியும்மா.. பெரிய எழுத்தாளன் ..ஆனால் யாருமே என்னைக்கொண்டாடவில்லை" என்று பக்கம் பக்கமாய் ப்ளாக்கில் எழுதித்தள்ளி இருப்பேன். 

அப்போதும் யாராவது என்னைப்போல் ஒரு வரி எழுதக்கூடும்!

ஆக்கப்பூர்வமான  சிந்தனைகளை விதைக்காமல் விவாதிக்காமல் ஒரு பெரும் கூட்டத்தைக்கூட்டி ஆபாசமாக பேசுவதும் 'அது இப்படி இருந்தால் எப்படி இருக்கும்' என்று தேவை இல்லாமல் அசிங்கத்தைப்பற்றி பேசுவதும்...!

"முன்னேர் எப்படியோ அப்படியே பின்னேர் செல்லும்" .  தலைவன் எப்படி சிந்திக்கிறானோ அப்படித்தான் அவன் தொண்டர்களும்!

இந்த சண்டைகளைப்பார்த்து பார்த்து புளித்துவிட்டது. இனி யாருடைய வாசகனும் அல்ல..விசிறியும் அல்ல!  அது போன்ற அபத்தம் வேறு  எதுவும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!

நமக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. இவர்களின் சண்டைகளை வேடிக்கை பார்ப்பதை விட அந்த நேரத்தை நம் முன்னேற்றத்தில் செலவிட்டால் நம் குடும்பமாவது உருப்படும்!

   

  





கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்