அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன் - ஒரு பகிர்வு - II
என் முதற் பதிவில் முன்னுரையோடு நிறுத்திவிட்டேன் - அதற்கு காரணம் என் நேரமின்மைதான். மன்னிக்க!
வார்த்தைகள் எப்போது வடிவம் பெறுகின்றன எப்போது உருமாறுகின்றன எப்போது அர்த்தமிழக்கின்றன என யாருக்குமே தெரிவதில்லை. அதைத்தெரிந்தவர்கள் யாருமே நிம்மதியாய் இருந்ததில்லை இந்தக்கவிஞனும் அப்படித்தான் ஏன் நமக்கு வார்த்தைகள் தெரிந்தன அர்த்தம் புரிந்தன என்று தேம்பித்தேம்பி அழுகிறான்...பாவம் இவனால் என்ன செய்ய முடியும் அதற்காக அழுவதை விட...இது ஒரு நூற்றாண்டின் நோய் என்று சொல்வதை விட கவிஞரின் வார்த்தைகளிலேயே அதை பைத்தியக்கார விடுதி என்றே சொல்லிவிடலாம். இந்தத்தொகுப்பில் இது 18 வது கவிதையாக இருந்தாலும் இதைப்படித்தபிறகு இதுவே என் மனம் முழுக்க ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டது. ஆனால் அதைப்பற்றிப்பேசிப்பேசி பொய்யான தகவல்களை சொல்லிச்சொல்லி அதைக்கேட்டுகேட்டு எப்போதும் போல அதுவும் ஒரு சாதாரண ஒரு விஷயமாகப் போய்விட்டது நம் எல்லோருக்கும்.
"புலம் பெயர்ந்த
என் ஈழத்து நண்பர்கள்
இப்போது கொல்லப்பட்டவர்களை
நினைவு கூர்வதில்லை
நம்பிக்கையூட்டும்
வதந்திகள் எதையும்
நம்புவதில்லை
யுத்தமுனைச்செய்திகளைப்
படிப்பதில்லை
அவர்கள் ஒரு பைத்தியக்காரனின் முகத்தை
சுவரில் வரைகிறார்கள்
குழந்தைகளின் இதயத்தைத்
தின்பவனின் பெயரை
சுவரில் எழுதுகிறார்கள்
ஒரு அபத்த தியாகத்தின் கதையை
எஞ்சி இருக்கும் தம் குழந்தைகளுக்குச்
சொல்லாமல் மறைக்கிறார்கள்
வரலாறு
இதற்கு முன்பும் இப்படித்தான்
ஒரு பைத்தியக்காரவிடுதியாக இருந்ததா?"
இதைப்படித்தபிறகு நாம் கண்ணீர் சிந்துவதை விட ஒரு கணம் எல்லோரும் மனத்தால் எழுந்து நின்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம். நம்மால் அதை விட வேறு என்ன செய்ய முடியும்?
இருந்தும் கண்களின் ஓரம் ஈரம் கசிவதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சில நேரங்களில் வியப்பாக இருக்கிறது இந்தக்கவிஞனை பார்த்து...அது எப்படி மனம் விம்மி விம்மி இரத்த அழுத்தம் ஏற்பட்டு தலை பாரத்தால் ஒன்றுமே செய்ய முடியாமல் போகும் தருணத்திலும் வார்த்தைகளுக்குப்பஞ்சமில்லாமல் சொல்ல வந்த விஷயத்தை நேரில் பார்ப்பதைப்போல அனாயாசமாக தூக்கி வீசிவிட்டுப்போகிறார். நம்மை மட்டும் ஒன்றுமே சொல்ல விடாமல் கொஞ்ச நேரம் அமைதி இழக்க வைக்கிறார் வார்த்தைகளற்று இப்படி.
"ஒரு தற்கொலை முயற்சியிலிருந்து
நான் காப்பாற்றப்பட்ட
மறுதினம்
நான் யார் என்பதை
நீ அறிந்து கொண்ட
மறுதினம்
எனக்கு கொஞ்சம்
பேசவேண்டும் "
நம் குழந்தைகளோடு விளையாடும் போது நாம் மறந்து விடும் ஒரு விஷயம், நாமும் குழந்தையாய் மாறாதிருப்பது. "குழந்தைகளின் பொம்மைகளாக இருப்பது" என்ற கவிதையில் நம்மை மீண்டும் குழந்தைகளாக மாறச்செய்து விடுகிறான் கவிஞன்.
"குழந்தைகள்
விழித்துக்கொள்ளும்முன்
சற்று நேரம்
நாம் வெளியே நடந்து விட்டு வரலாமா
என்று அவை கேட்கின்றன
புதிய பொம்மைகள்
வீட்டிற்கு வரும்போது
தாம் பதட்டமடைவதாகவே
ஒவ்வொரு பொம்மையும் தெரிவிக்கின்றன"
என்று பொம்மையின் வேலை பற்றி மிகுந்த கவலை கொள்கிறான். அதற்கு ஓய்வு இல்லை என்று பச்சாதாபம் கொள்கிறான். அது எத்தனை பொறுப்பு மிகுந்த பனி என்று சொல்லும் அவன், பொம்மைகளுக்கே இத்தனை பொறுப்பு இருக்கிறதே நமக்கு எத்துணை வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.
சிநேகிதிகளின் கணவர்களுடனான நட்பை மிகத்துல்லியமாய் பதிவு செய்கிறார் மனுஷ்.
"சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேகிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு"
என எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் அவர்
"நான் குழப்பமடைவதெல்லாம்
சினேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
ஒரு சினேகிதியை
"சிஸ்டர்" என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச்செல்வது என்று"
அவரே கேள்வி கேட்கிறார். ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது இந்த நக்கலைப்பார்த்து. மறு பக்கம் இந்த உண்மையை எப்படி ஜீரணிப்பது என்று நமக்குள்ளும் ஒரு கேள்வி வருகிறது. நமக்கும் நடந்துதான் இருக்கிறது இப்படி. அடுத்த வேலையைப்பார்க்க ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம் நாம். இதைப்பதிவு செய்ய மனுஷ்யபுத்திரனால்தான் முடிந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அவன் இப்படி பதிவு செய்தால் எப்படி இருக்கும்?
இதற்கும் அவனே பதில் சொல்கிறான் " என்னைப்பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று.
பரண்களில்
தலைமுறைகளாய் காத்திருக்கின்றன
உடைந்த ஊஞ்சல்கள்
கைப்பிடியில்லாத நாற்காலிகள்
முறிந்த மான் கொம்புகள்
படிக்கப்படாத ஏடுகள்
காணாமல் போன ஒற்றைச்சிலம்புகள்
பாதம் சேராத காலணிகள்
மூதாதையரின் நினைவுச்சின்னங்கள்
பயன்படுத்திக்கொள்ளப்படாத
ஒரு மனிதன் ஒளிந்து கொள்வதற்கு
இந்த உலகில் எந்த இடமும் இல்லை
என்னைப்பயன்படுத்திக்கொள்ளுங்கள் "
இந்த உலகத்தைப்பார்த்து கேள்வி கேட்டு ஓய்ந்து போய் எப்படியாவது பயன்படுத்துங்கள் என்று கேலி செய்கிறான், ஏனாம் ...
பயன்படுத்திக்கொள்ளப்படாத
ஒரு மனிதன் ஒளிந்து கொள்வதற்கு
இந்த உலகில் எந்த இடமும் இல்லை ----அதனால் தன்னைப்பயன்படுத்திக்கொள்ளுமாறு ஏளனம் செய்கிறான். எதிர்பார்ப்பு இல்லாமல் இந்த உலகம் இல்லை. நீ ஒன்று செய்தால் நான் ஒன்று செய்ய வேண்டும், இல்லையானால் நாம் இங்கே வாழத்தகுதியற்றவர்கள். அதையும் விட்டு வைக்கவில்லை இந்தக்கவிஞன்.
"பரஸ்பரம் சில உதவிகள்" என்று நையப்புடைத்திருக்கிறான்.
"ஒரு திருட்டுப்பொருளை
திரும்ப வைப்பது போல
பெற்றுக்கொண்ட ஒரு உதவியை
திரும்ப வைக்க வேண்டும்
-----
------
உதவிகள் காயத்தைப்போல
நினைக்கப்படுகின்றன
அளித்தவர்களாலும்
பெற்றுக்கொண்டவர்களாலும்
சாட்சியாக இருந்தவர்களாலும்
அவை எதிர்பாராத ஒரு தருணத்தில்
சொல்லப்படுகின்றன "
இந்த வரிகளைப்படித்த மாத்திரத்தில் என் அனுபவமும் சேர்ந்து கொண்டதால்...சில மணித் துளிகளுக்குப்பிறகே அடுத்த வரிகளுக்குப்போக முடிந்தது. இந்தக்கவிதையை முடிக்கும்போது நிச்சயம் மனுஷ்யபுத்திரன் கதறி அழுதிருக்க வேண்டும் அல்லது அது போன்றதொரு மனநிலையில் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஒரு முறை நீ
உன் மகத்தான காதலால்
என்னை மரணத்திலிருந்து
விடுவித்தாய்
பதிலுக்கு
கடவுள்
உன் முகத்தை எனக்கு
நிரந்தரமாக
மறந்து போகச்செய்தார்"
எப்படி அழாமல் இருக்க முடியும் சொல்லுங்கள். கண்ணீரை தேக்கி வைக்காமல் மிச்சம் பிடிக்காமல் அழுது தீர்த்து விடுங்கள், முடிந்தால் சத்தாமாய் ஒரு முறை. உங்கள் மன அழுத்தம் குறையும் அல்லது மீண்டும் ஒரு முறை புதிதாய்ப்பிறப்பீர்கள்!
மனுஷின் கவிதைகளை நீங்கள் எந்த வரைமுறைகளுக்குள்ளும் கொண்டு வர முடியாது. ஒரு கவிதை ஈழம் பற்றிப்பேசும் ஒரு கவிதை உங்கள் பக்கத்து வீட்டு மனிதர்களைப்பற்றிப்பெசும் ஏன் அது உங்களையே கூட பேசும் இந்த சமூகம் பற்றிப்பேசும் அரசியல் பேசும் உள்மன அழுக்குகள் பற்றிப்பேசும் சில நேரம் அவரின் வலி பற்றி வலி தந்த வேதனை பற்றி...இப்படி பல முகங்கள் உண்டு. இப்படிப்பேசிப்பேசி அவரின் எழுத்து நடை ஒரு கன்னியின் நடை போல ஒரு சீரான வேகத்தில் சில நேரம் முதிர்கன்னி போல கோபத்தில் பொங்கிப்பிரவகித்து வரும் அருவி போல ..இந்த சாத்தியங்கள் அனைத்தும் அவரே முயற்சி செய்தது...கண்னதாசனைப்பற்றி அவரே சொல்லும் ஒரு விமர்சனம்: "உங்கள் வாழ்க்கைப்பாதையில் எந்த அனுபவத்தில் நீங்கள் இருந்தாலும் அதைப்பற்றி நிச்சயம் ஒரு வரி நான் எழுதி இருப்பேன்" .
அவர் அனுபவித்த அனுபவங்களைப்பற்றி சொன்னார்.
மனுஷ் இன்னும் இருபது வருடங்களுக்கு சேர்த்து இப்போதே அதை எழுதி வருகிறார் என்றே எண்ணுகிறேன். இன்னும் பல கவிதைகளை கருத்தாழத்திற்கும் மொழி நடைக்கும் உதாரணம் சொல்லலாம். ஆனால் அது வெறும் மேற்கோள் காட்டும் வார்த்தைகளாகவே அமைந்துவிடும்.
தமிழில் முனைவர் பட்டம் பெறுவோர் மனுஷின் கவிதைகளை ஆராய்ந்தால் இன்னும் பல அறிய பொக்கிஷங்கள் தமிழுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதிலிருந்து ஆரம்பமாகும் பைத்தியக்கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. நம்மை நிம்மதி இழக்கச்செய்பவை. சில கவிதைகள் மேலோட்டமாகப்பார்த்தால் அனுதாபம் கொள்ள வைப்பவை...மறு வாசிப்புக்குப்பிறகு அவைகள் சிந்திக்கத்தூண்டுபவை. எந்த ஒரு கவிஞனும் அனுதாபத்திற்காக எழுதுவதில்லை. அவன் சிந்தனை நீரோட்டத்தில் அதுவும் ஒன்று என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
இங்கே பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். அல்லது நடக்க இருக்கலாம். அந்த தீர்க்க தரிசனம் எல்லா வரிகளிலும் நிரம்பி இருக்கிறது.
"சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" என்ற கவிதை இப்போது மிக நெருக்கமாக அதை உணர்கிறேன். 75 வருடங்களாக ஓடியாடித்திரிந்த என் தந்தையின் கால்கள் செயல் இழந்து அதன் பயன்பாட்டை நிறுத்தியதும் இந்த சக்கர நாற்காலில்தான் பயணம் செய்கின்றன. இதில் வரும் ஒரு வரி என்னை ஸ்தம்பித்து போகச்செய்தது...
"எந்த நியாயமான , நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை"
ஆளுயரக்கண்ணாடி என்பது நம் பிம்பம் காட்டும் கருவி மட்டும் அல்ல...நம் எண்ண ஓட்டங்களைச்சொல்லும் ஒருவிதமான திரை. இந்தக்கவிஞனும் அதைப்பார்க்கிறான் எப்படி?
"இன்னொருவரின் நிர்வாணத்தை
எதிர்கொண்டது போல நீ எப்போதாவது
உன் நிர்வாணத்தை
எதிர்கொண்டிருக்கிறாயா?
உன் நிர்வாணப் புகைப்படத்தில்
யாருக்காவது கையெழுத்திட்டுக்
கொடுத்திருக்கிறாயா?
என்று கேட்கும் கவிஞன் நம் மன இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கேள்விகளையும் சில பல அகங்காரங்களையும் கண் முன்னே காட்டுகிறான். அதன் சிருமைகளைப்பற்றி பேசுகிறான் அதன் பெருமைகளையும் அவன் பேசத்தவறவில்லை. இருந்தாலும் நம் பிம்பம் பற்றி எப்போதும் நாம் கொள்ளும் மயக்கம் அலாதியானது.சில தனிமைகளில் அது உண்மை பேசும்போது நம்மால் கேட்க முடிவதில்லை. நம் காதுகளை நாமே அடைத்துவிடுகிறோம்.
"கண்களைத்தவிர
நம் உடலில் வேறு எங்கும்
நம் சிறுமையின் நிழல்கள்
படிவதே இல்லை" என்று நம் கண்களே நமக்கு எதிரி என்பதை சூசகமாய் தெரிவிக்கிறான்.
"ஆளுயர நிலைக்கண்ணாடியின்முன்
இந்த அதிகாலையில்
இவ்வளவுக்கும் பிறகு
இன்னும் ஆயிரம் வருடங்கள் இருப்பேன்
என்று உறுதியாக நினைத்தபடி
நின்றுகொண்டிருக்கிறேன்"
ஆணவத்தின் பதிவாகவே இந்தக்கண்ணாடிகள் இருக்கின்றன...நாம் ஒருபோதும் அதை ஒத்துக்கொள்வதே இல்லை.
இப்போதெல்லாம் இளைஞர்களிடம் ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. கவிதைகள் படித்தால் என்ன இருக்கிறது அல்லது என்ன வருகிறது? என்பது.
ஒரு நல்ல கவிதை தரும் சுகம் என்பது அல்லது கவிதை படித்தால் இப்படி எல்லாம் இருக்கும்:
ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்தால் ஒரு நம்பிக்கை வருவதைப்போல அல்லது அந்த நிறுவனத்தில் நம்மை நிலை நிறுத்திக்கொண்ட பிறகு நம் புதுச் சிந்தனைப் பாய்ச்சல்களை முன்னிறுத்தி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதைப்போல அல்லது உங்கள் காதலியை உச்சிமுகரும்போது கிடைக்கும் சந்தோசம் போல உங்கள் தாயின் பழைய பட்டுப்புடவையைப்போல அல்லது உங்கள் உறவுகளின் கைத்தாங்கல் போல...அது கொடுக்கும் சுவையும் நம்பிக்கையும் வேறு எதனோடும் ஒப்பிட முடியாதது மேலே குறிப்பிட்டதைப்போல! அதைச்செய்யும் கவிஞன் ஒரு சாதாரணன் இல்லை. ஒரு மேய்ப்பன் அல்லது மீட்பன்!
கடைசியாய் ஒரே ஒரு கவிதையோடு இந்த பகிர்வை நிறைவு செய்ய விரும்புகிறேன்....இல்லையெனில் இது ஒரு மின் புத்தகம் அளவில் வந்து விடும். அப்படிச்செய்தால் திருட்டு VCD க்கும் இந்த பகிர்வுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
"அதீதத்தின் ருசி" என்ற கவிதையில் தனக்கு நடந்ததை மனிதன் எல்லாருக்கும் பொதுப்படையாக்கும்
உத்தி ....அதுதான் கவிஞனின் வெற்றி என்றே நினைக்கிறேன்!
"கடவுள்
என் முறை வரும்போது மட்டும்
கொஞ்சமாகவே தன கைகளைத்திறக்கிறார்
என்னை முத்தமிடும்போது மட்டும்
பாதியே அணைத்துக்கொள்கிறார்
எனக்குத்தேவைப்படுவதும்
அவ்வளவே
என்றபோதும்
எப்போதாவது
ஏதேனும் ஒன்று
நிறைய கிடைத்தால்
நல்லதுதான்
அதீத்தை எப்படி
எதிர்கொள்வது என்று
சோதிப்பதற்காக
அதன் ரத்த ருசியை
ஒரு கணம் அறிவதற்காக "
எங்கே உங்கள் மனதைத்தொட்டுச்சொல்லுங்கள் இப்படி எல்லாம் நீங்கள் நினைக்கைவில்லை என்று!
2 கருத்துகள்:
எனக்கு பிடித்த வரிகள்:
"ஒரு திருட்டுப்பொருளை
திரும்ப வைப்பது போல
பெற்றுக்கொண்ட ஒரு உதவியை
திரும்ப வைக்க வேண்டும் ..."
உதவி செய்வதின், பெறுவதின் உறுத்தலை கவிஞன் உற்று நோக்கி இருப்பது தெரிகிறது..
புரியாத வரிகள்...
"ஒரு முறை நீ
உன் மகத்தான காதலால்
என்னை மரணத்திலிருந்து
விடுவித்தாய்
பதிலுக்கு
கடவுள்
உன் முகத்தை எனக்கு
நிரந்தரமாக
மறந்து போகச்செய்தார்"
மற்றபடி உன் பகிர்வு, கொஞ்சம் அதிகப்படி.. (exaggeration)
எனக்கு பிடித்த வரிகள்:
"ஒரு திருட்டுப்பொருளை
திரும்ப வைப்பது போல
பெற்றுக்கொண்ட ஒரு உதவியை
திரும்ப வைக்க வேண்டும் ..."
உதவி செய்வதின், பெறுவதின் உறுத்தலை கவிஞன் உற்று நோக்கி இருப்பது தெரிகிறது..
புரியாத வரிகள்...
"ஒரு முறை நீ
உன் மகத்தான காதலால்
என்னை மரணத்திலிருந்து
விடுவித்தாய்
பதிலுக்கு
கடவுள்
உன் முகத்தை எனக்கு
நிரந்தரமாக
மறந்து போகச்செய்தார்"
மற்றபடி உன் பகிர்வு, கொஞ்சம் அதிகப்படி.. (exaggerated)
கருத்துரையிடுக