புதன், ஏப்ரல் 27, 2011

தேவதைகளும் தேவதைகளும்!

  
தேவதைகள் பிறக்கிறார்கள் 
சாத்தான்கள் வளர்க்கப்படுகிறார்கள் 

நல்ல செயல்கள் செய்யும் 
எல்லாமும் தேவதைகள் என்கிறார்கள் 
தீய செயல்கள் செய்யும் 
எல்லாமும் சாத்தான்கள் என்கிறார்கள் 

உண்மையில் சாத்தான்கள் அனைத்தும் 
தேவதைகளாக இருந்தவையே!

தேவதைகள் அனைத்தும் 
சாத்தான்களாக பிறப்பதில்லை

தேவதைகள் தங்கள் 
தேவைகளுக்காகவே சாத்தான்களை 
உற்பத்தி செய்கின்றன!
உற்பத்தி செய்யப்படும் 
சாத்தான்கள் தேவதைகளின் 
பிம்பம் தாங்கியே வெளி வருகின்றன!

தேவதைகளுக்குக் கோபம் வரும்போது
சாத்தான்களை ஏவி விடுகின்றன
தாங்கள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது
என்பதற்காகவே சாத்தான்களை
வேலைக்கு அமர்த்துகின்றன

தேவதைகள் எப்போதும்
அதிகாரம் செய்கின்றன
சாத்தான்கள் எப்போதும்
கூலிவேலை செய்யும் ஏவலாளி போல    
பரிதாபம் கொள்ளவைக்கின்றன

தேவதைகள் ஒருபோதும் 
நிம்மதியாய் உறங்குவதில்லை
சாத்தான்களுக்கு நிம்மதி என்றால்
என்னவென்று தெரிவதில்லை

தேவதைகள் சாத்தான்களையே நம்புகின்றன
சாத்தான்கள் இவை எதுவும் புரியாமல்
இயந்திரம் போல இருக்கின்றன

தேவதைகள் சாத்தான்களையே
சார்ந்து வாழ்கின்றன!
தாம் உருவாக்கிய பிம்பங்களை
குறை சொல்லியே தாமும்
சாத்தான்கள் போலவே வாழ்கின்றன!

தேவதைகள் எனத்தங்களை
அழைத்துக்கொள்ளும் எதுவும்
தேவதைகளாக வாழ்ந்ததே இல்லை!


தேவதைகளாகப் பிறக்கின்ற எதுவும்

கடைசியில் சாத்தான்களாகவே மரிக்கின்றன!





கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்