வியாழன், மார்ச் 03, 2011

மனிதப்பொருள்

 கணினியில்
ஆண் பெண்ணைத்தேடுகிறான்
பெண் ஆணைத்தேடுகிறாள்...

ஆண் வெளிநாட்டில் வேலை செய்தால்
நல்ல விலைக்குப்போகிறான்!
பெண்   பன்னாட்டு நிறுவனத்தில்
வேலை செய்தால் மின்னஞ்சலிலேயே
 திருமண ஒப்பந்தம் முடிந்து விடுகிறது!

குளிரூட்டப்பட்ட திருமண மண்டபத்தில்
 கைகூப்பி வரவேற்கின்றன
இயந்திரச்சிலைகள்...

யாருடனோ கைப்பேசியில்
குலவிக்கொன்டே மாப்பிள்ளை என்பவன்
தாலி கட்டுகிறான்...

புது மணத்தம்பதிகளை 
வித விதமாய் போட்டோ
எடுக்கிறார்கள்...
 அவர்களும் தங்களை  காட்டிக்கொள்கிறார்கள்  
விதவிதமாய் அலங்காரம் செய்தபடி
போலியாய்  சிரித்தபடி
எப்போதும் யாரையோ
கூப்பிடுவது போல் நடித்தபடி...

(வர)தட்சணையாய் வந்த பொருள்
வைத்த இடத்தில் வைத்தபடி இருக்க
வீட்டில் சாப்பிட்டால் கவுரவக்குறைவு என
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவகம்
ருசி தேடித்தேடி அலைந்து திரிந்து
இன்னபொருள் இங்கே நன்றாய் இருக்கும்
என்று அடுத்தவர்களிடம்
தற்பெருமை பேசித்திரிவார்கள்...

எந்த வித  வீட்டு வேலையும்
செய்யாமல் குனிந்து நிமிராமல்
உடம்பு புடைத்து
கை கால் நீட்டினால் வலிக்குமென்று
எல்லா வலிக்கும் சேர்த்து
ஒரு வலி நிவாரணி போட்டுக்கொண்டு...

குழந்தை பிறக்கும் நேரத்தை
அவர்களே நிர்ணயம் செய்து
நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்து
கடையில் போய் பொருளை எடுப்பதுபோல
வயிற்றில் இருந்து
குழந்தையை எடுப்பார்கள்...

அப்பா அம்மா அலுவலகம் சென்றுவிட
அவர்களுக்குப்பிறந்த குழந்தை
நிராதரவாய் வளரும்
தொலைக்காட்சியில் ஏதாவதொரு
நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு
வீட்டிலுள்ள பொருளோடு
அதுவும் ஒரு பொருளாக ஆகிக்கொண்டு
கையில் ரத்தம் வழிய
சிறுநீர் போவது கூட தெரியாமல்
கணினியில்
மனிதன் மனிதனைச்சுடும் விளையாட்டு
விளையாடிக்கொண்டு...!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்