திங்கள், பிப்ரவரி 28, 2011

ஒரு மண் சுவரின் கதை..!


அது மிகப்பெரிய கூரை  வீடு 
வீட்டை ஒட்டி
தென்னை எலுமிச்சை
இன்னபிற  மரங்கள் மலர்கள்
சூழ்ந்த அழகான தோட்டம் !

மலர்களின் சுகந்தத்தைவிட
எனக்கு குழந்தைகளின்
விளையாட்டுச்சத்தம் தான்
மனதுக்கு இதமாய் இருக்கும்...

கோடை விடுமுறை என்றால்
எனக்கும் கொண்டாட்டமாக இருக்கும்


அது கூரை வீடுகளின் காலம்
என்னைப்போன்றவர்களுக்கு
மரியாதை இருந்த காலம்!

என்னை எல்லோருக்கும்
பிடித்திருந்தது
குறிப்பாக குழந்தைகளுக்கு!

என்னில் முகம் புதைத்து
கண்ணாமூச்சி விளையாடுவார்கள்
பின் மண்ணில்  குச்சி
மறைத்து விளையாடுவார்கள்
சண்டை போடுவார்கள்
அழுவார்கள் கண்ணில்
 நீர் வர சிரிப்பார்கள்
என்னில் நிலாக்கும்பல்
 வைத்து விளையாடுவார்கள்
இது வருடா வருடம் தொடரும்...

இப்படி ஒரு முறை வரும்போது
அவர்கள் எல்லோர் பெயரையும்
என் மீது எழுதினாள்  ஒரு குழந்தை!
எதை நினைத்து எழுதினாளோ
அதன் பிறகு அவர்கள் யாரும்
என்னைப்பார்க்க வருவதே  இல்லை...!

நீண்ட வருடங்களுக்குப்பிறகு
ஒரே ஒரு முறை அதில்
ஒருவன்  என் மீது
எழுதப்பட்டிருந்த பெயர்களைப்
பார்த்தபடி ஆழ்ந்து தடவியபடி
ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டான்...

அப்போது அந்த
எல்லாக்குழந்தைகளுக்கும்
ஒவ்வொரு குழந்தை இருப்பதை
அந்த பெருமூச்சு எனக்கு சொல்லியது...!

அதற்குப்பிறகு யாரும் என்னை
கண்டு கொள்வதே இல்லை
ஒரு நாள் ஒரு சண்டையில்
என்னை இடித்து விட்டார்கள்
என்னோடு அந்த பெயர்களும்
மண்ணோடு மண்ணாகிப்போனது!

என் ஐம்பது  வருட பாரம்பரியம் 
என்னோடு தூளாகிப்போனது...

இப்போதெல்லாம் இந்தப்பக்கம்
எந்தக் குழந்தையும்  விளையாட வருவதில்லை
மலர்களோடு பேசுவதில்லை
தென்னை மரத்தின் பின்னே
ஒளிந்து கொள்வதில்லை
வேப்பமரத்தில் ஊஞ்சல் ஆடுவதில்லை
என்னைப்போன்றவர்களை யாரும் கட்டுவதில்லை
நாங்கள் எல்லோரும்
எல்லாரும் இருந்தும்
பாலைவனமாகிப்போனோம்...!

நான் காய்ந்து போன சாதாரண
மண் சுவர்தான் - ஆனால்
நினைவுகள்  சுமந்து கொண்டு
அதிகமாய் ஈரம்    கசிந்து  கொண்டு
அந்தக்குழந்தைகளை எதிர்பார்த்துக்கொண்டு
மண்ணோடு மண்ணாக
இன்னும் இருக்கிறேன்
இன்னும் இருப்பேன்...!









கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்