இனிமையான நினைவுகளெல்லாம்
குப்பைகளாகிப்போன ஒரு
கருப்புக்காலத்தில்
அவற்றையெல்லாம் கொட்டி
எரித்துவிட எத்தனித்தேன்!
பள்ளி நாட்களில்
பழகிய கார்த்திகேயனின்
சின்னதாய் கோபித்துக்கொண்டதற்கான
செல்ல மன்னிப்புக்கடிதம்...!
ஆயிரம் எழுத்துப்பிழைகளோடு
தாறுமாறாய் முகவரி எழுதி
அதை எப்படியோ எனக்குக்
கிடைக்கவைத்த பால்யகால
நண்பனின் அப்பாவிக்கடிதம்...!
வாரம் இருமுறை
'நன்றாக சாப்பிடு' என்று
மட்டுமே வரும்
அப்பாவின் நலன் விசாரிப்புக்கடிதம்...!
எழுதிவிட்டு எப்போதும்
அஞ்சல் செய்ய மறந்து போகும்
அண்ணன் ஒரு முறை அவரின் நண்பரின்
மூலமாய் கொடுத்தனுப்பிய
அந்த ஆங்கிலக்கடிதம்...!
சகோதரி கல்லூரிக்குப்போனதும்
முதன் முதலாய் எழுதிய
அந்தப்பாசக்கடிதம்...!
என்னை அறிவுஜீவி என்று
பாராட்டி வந்த அந்த
முத்து மாலைக்கடிதம்...!
பாடத்தைப்படி பிறகு
கவிதை எழுது ' என்று
அன்பு கலந்த எச்சரிக்கையோடு
முதன் முதலாய் எனக்கு அனுப்பிய
அன்புத்தோழி அண்ணியின் கடிதம்...!
கல்லூரி முடித்தபின்
எனக்குக்கிடைத்த அந்த முதல்
சிநேகிதி தன் நட்பை முறித்துக்கொள்வதற்கு முன்
எழுதிய மிகவும் அந்தரங்கமான
ஈமெயில் - கடிதம் ...!
கடைசி கடைசியாய்
நான் உனக்கு எழுதி
நான் மட்டுமே படித்த
இன்னும் அஞ்சல் செய்யாத
இனிமேல் அதற்கு அவசியம் இல்லாத
அந்த எழுபது பக்க
கவிதைக்கடிதம்...!
இவற்றை எல்லாம் குப்பை என்று
எரித்துவிட்டால் நானே
சாம்பலாக மாட்டேனா...?
----2003--தேதி நினைவில் இல்லை...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக