திங்கள், ஜனவரி 24, 2011

அஞ்சல்!

நீங்கள் எழுதிய முதல் காகிதக்கடிதம்
எது என்று சொல்லமுடிந்தால்
உங்கள் கையெழுத்து பற்றி நான் சொல்லக்கூடும்!

ஏனெனில் -
பல கடிதங்கள்
எழுதி இருக்கிறேன்
பல கடிதங்கள்
வாசித்திருக்கிறேன்
பல கடிதங்களுக்கு
நானே முத்திரை குத்தி இருக்கிறேன்!

கையெழுத்தை வைத்தே
சொல்லிவிடுவேன்
தபாலின் தலை எழுத்தை...!

நீங்கள் எழுதிய முதல் காகிதக்காதல் கடிதம்
எது என்று சொல்ல முடிந்தால்
உங்கள் காதலியைப்பற்றி நான் விரிவாய் சொல்லக்கூடும்!

ஏனெனில் -
பல கடிதங்கள்
கவிதைகள் ஆனதுண்டு!
பல கவிதைகள்
இரவல் போனதுண்டு!

நீங்கள் எழுதிய முதல்  காகித விண்ணப்பக்கடிதம்
எது என்று சொல்லமுடிந்தால்
உங்கள் வேலையைப்பற்றி நான் முழுதாய் சொல்லக்கூடும்!

ஏனெனில் -
நிறைய விண்ணப்பங்கள்
எழுதியதுண்டு!
நிறைய விண்ணப்பங்கள்
அனுப்பியதுண்டு!

நீங்கள் எழுதிய  முதல் காகிதக் கையெழுத்தை முகர்ந்து                  
பார்த்ததுண்டு எனில்
உங்கள் வாசனை பற்றி நான் கதை கதையாய் சொல்லக்கூடும்!

ஏனெனில்  -
எழுதிக்கொண்டே இருப்பவன்;
நான் எழுத்துக்களோடு வாழ்பவன்!

ஆனால்...
நீங்கள் அனுப்பிய  முதல் மின்னஞ்சல் எது என்று சொன்னால்
உங்களைப்பற்றிய எந்த ஒரு உணர்வையும்  என்னால் சொல்லமுடியாது !

ஏனெனில் - மனதில்
எவ்வித   உணர்ச்சிகளும் தோன்றுவதில்லை
எந்தவிதமான  மின்னஞ்சல் வாசிக்கும்போதும் !


1 கருத்து:

James சொன்னது…

//மனதில்
எவ்வித உணர்ச்சிகளும் தோன்றுவதில்லை
எந்தவிதமான மின்னஞ்சல் வாசிக்கும்போதும் ! //

இல்லையே தல, வெகு நாட்கள் பின் வரும் நண்பனின் மின்னஞ்சல் காணும் பொது எதோ ஒரு உணர்வு தோன்றுகின்றதே ? அப்படி அனுபவம் இருக்கிறதா? (உதா : உங்கள் வலை பக்கம் காண கிடைத்தது)

வலைப்பதிவு காப்பகம்