புதன், ஜனவரி 19, 2011

நாட்குறிப்பு (டைரி):

நாட்குறிப்பு (டைரி):

நாட்குறிப்பு  என்பது 
நினைவுகளின் வாசனை!
    சில பக்கங்களில்
           காதலின் வலி
           நண்பனின் துரோகம்
            உறவுகளின் பரிகசிப்பு
           உன்மத்தம் ஏறிய கவிதைகள்!
  எல்லாவற்றையும் சம்பவம்
  நடந்த அன்றே எழுதியது
  என்று சொல்ல முடியாது!
  நெஞ்சத்தில் தேக்கி வைத்து
  மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து
  தூக்கம் வராமல் குரோதம் வளர்த்து
  வன்மத்தால் எழுதிய குருதி
 படிந்த வார்த்தைகளாக இருக்கலாம்!      
      
நாட்குறிப்பு  என்பது 
       கூடலுக்கு பிறகான 
      அதிகாலை வாசனை!
            சில பக்கங்களில்
                     உறவுகளின் நெகிழ்ச்சி
                     பிடித்த பாடல்களின் வரிகள்
                     காதலைப்பற்றிய வர்ணனைகள்
                      யாருக்கோ உதவிய குறிப்புகள்!

எல்லாம் அன்றே எழுதி இருக்கலாம்...
அடிமனதின் ஆழம் சென்று
யோகத்தின் ஒரு சூன்யத்தில்
உடலெங்கும் பரவும் ஒரு
ஆச்சர்யத்தின் புத்துணர்ச்சியோடு
ஒரு நேர்க்கோட்டில் உருவாகும்
வார்த்தைகளோடு அந்த பக்கங்கள்
நிரப்பப்பட்டிருக்கலாம்!                         
                   
  
நாட்குறிப்பு  என்பது 
ஒரு அடிமையின் வாசனை!

   சில பக்கங்களில்
                 யாரையோ திட்டி தீர்த்தது
                 கர்வத்தோடு  சண்டையிட்டது
                  ஏமாற்றத்தில் புலம்பியது
                   தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டது
                  சுய பச்சாதாபத்தில் தவிப்பது!

அந்த நாளின் பக்கங்களில்
இதை எல்லாம் எண்ணி எண்ணி
மனதோடு பேசி பேசி
ஒரு கழிவிரக்கத்தோடு
தன் முகத்தில் தானே கரி பூசி
ஒரு அடிமையின் புத்தியோடு
எழுதப்பட்ட வாக்கியங்களாக இருக்கலாம்!
                          
நாட்குறிப்பு  என்பது 
ஒரு பிணத்தின் வாசனை!

            சில பக்கங்களில்
                         கள்ளக்காதல் உறவுகள்
                         படிக்க முடியாத வார்த்தைகள்
                         மனதால் நினைக்கக்கூடாத கற்பனைகள்!

ஒரு கொடூரத்தின் பின்னணியில்
கீழ்த்தரமான சிந்தனையில்
சேர்க்கை சரி இல்லாத நிலையில்
படிக்கப்படிக்க உடம்பும் மனசும்
கூசிப்போகிற ஒரு வக்கிரமான
எழுத்துக்களாக இருக்கலாம்!                             

நாட்குறிப்பு  என்பது 
ஒரு தோல்வியின் வாசனை!

   சில பக்கங்களில்
                          பசியோடு வேலை தேடியது
                          வசவுகளோடு வாழ்க்கை நடத்தியது
                          காதலை வெற்றி தோல்வியோடு
                          சம்பத்தப்படுத்தியது
                          கண்ணில் படுபவர்களை எல்லாம்
                         குறை  சொல்லி குறை சொல்லி  குரைப்பது!

சுய முன்னேற்றமில்லாமல்
சுயமாய் சம்பாதிக்க முடியாமல்
யாராவது வேலை வாங்கி கொடுப்பார்கள்
என்ற திமிரோடு 'எல்லாம் அவன் செயல்'
என்று தத்துவம் பேசி சீரழிந்து
இந்த மனிதர்களே இப்படித்தான்
என்ற ஒரு உயர்ந்த கோட்பாடு கொண்டு
திருத்தமாய் எழுதக்கூடத்தெரியாமல்
வார்த்தைப்பிழைகளோடு வாழ்க்கைப்பிழையும்
கொண்ட எழுத்துக்களாகக்கூட இருக்கலாம்!                                                
                             

நாட்குறிப்பு  என்பது 
ஒரு காதலின் வாசனை!
   பல பக்கங்களில்
           வண்ண வண்ண சித்திரங்கள்
           வர்ணங்களால் எழுத்துகள்
           வர்ணனைகள் உருவகங்கள்
           அணிகள் யாப்புகள்
           அனேகமாக எல்லா நாட்குறிப்புகளிலும்
           காதலியின் பெயர் பொறித்த நட்சத்திரங்கள்!

 அர்த்தங்களற்ற  உவமைகளும்
அர்த்தமற்ற வார்த்தைகளும்
எங்கும் எல்லாமும் கடவுளைப்போல
காதலியை காண்பதும்
காதலை கடவுள் தன்மையாய் ஆக்குவதும்
பெயரை சொன்னாலே ஆடுவதும்
பாடுவதும் ஓடுவதும்
ஒரு பைத்தியமாய் ஆவதும்
எந்த வார்த்தைக்கும் அர்த்தம் கொள்ள
முடியாத எழுத்துக்களாகவும் இருக்கலாம்!
              
         
நாட்குறிப்பு  என்பது 
ஒரு சரித்திரத்தின் வாசனை!
             எல்லா பக்கங்களிலும்
                                        மனிதப்பிதற்றல்கள்
                                        ஓலங்கள்   கண்ணீர்த்துளிகள்         
                                        சிரிப்பொலிகள் நகைச்சுவைகள்
                                        வெற்றிகள் தோல்விகள்
                                        உறவுகள்  துறவுகள்!

ஒருவனின் நாட்குறிப்பு
அவன் மனிதனாய் வாழ்ந்ததன் கல்வெட்டு!

 ஒருவனின் நாட்குறிப்பு
அவனின் இன்னொரு இதயம்!

 அது அவனின் இன்னொரு பிரதி!
இதுதான்  ஒரு சரித்திரத்தின் விதி!   

மனிதன் பிறந்து இறக்கிறான்
ஒருவனின் நாட்குறிப்பு 
இறந்து பிறக்கிறது  - ஆனால்
சரித்திரம் இறப்பதில்லை! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்