செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

நதி வழி

நதி வழி நானும்
விதி வழி நீயும்
பயணம் செய்தோம்!

நதி வழி என்பது
அது போடும் பாதை!
விதி வழி என்பது
ஆயத்த ஆடை!

எனக்கு அடுத்தவர்
வழி பிடிப்பதில்லை!
உனக்கு புதிய
பாதை திறப்பதில்லை!

நாலு புறமும் ஓடி
என்னை நானே
கழுவிக்கொள்வேன்!
தேங்கித்தேங்கி - நீ
தேரடி வீதி
குளமாவாய்!

திரும்பிப்பார்க்க - எனக்கு
கழுத்தில்லை!
திரும்பித்திரும்பிப்பார்த்தே - உனக்கு
கழுத்தில்லை!

 எப்போதும் திறந்தே
 இருப்பவன் நான்!
எப்போதாவது திறந்தாலும்
எதுவுமே தெரியாமல்
இருட்டாய் இருப்பாய் நீ!

ஓட ஓட
களைப்பதில்லை நான்!
ஒளிந்து ஒளிந்து
சோர்ந்து போவாய் நீ!

காற்று என் மீது பட்டு
தென்றலாகும்!
தென்றல் கூட உன் மீது பட்டு
புழுங்கிப்போகும்!

அதனால்தான்
நான் கடலைத்தேடிப்போகிறேன்!
நீ உடலைத்தேடிப்போகிறாய்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்