திங்கள், ஆகஸ்ட் 13, 2012

எப்போதும் கவிதை செய் எப்போதாவது காதல் செய்!


1998 - புத்தகங்களோடும் அதன் ஒவ்வொரு வரிகளோடும் வாழ்ந்து கொண்டிருந்த காலம்! நல்ல நண்பர்களோடு சேர்ந்து விவாதித்த காலம். 
என்னையும் எழுத வைத்து அவர்களும் எழுதிய காலம்! 
கண்ணபிரான் கவிதை செய்த காலம்...! நீ எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தே அல்ல என்று முகத்திற்கு எதிரே ஜனா சண்டையிட்ட காலம்! 
பாலகிருஷ்ணன் என்று ஒருவன் எங்கோ ஒரு பூஞ்சோலை கிராமத்தில் பிறந்து பாரதிதாசன் கவிதைகளை படித்து விட்டு "அவன்தான் கவிஞன் அவன் மட்டுமே கவிஞன்" என்று என்னிடம் விவாதம் செய்த ஒரு காலம்!

அப்படி விவாதிக்கும் போதே சிலரிடம் இருந்து வரும் வார்த்தைப்பிரயோகங்கள்  அதிசயிக்க வைக்கும்! சொல்லிய நபரே கூட "நானா இப்படி" என்று வியந்த காலம்! அப்படி 14 வருடங்களுக்கு முன்பு ஜனாவால் எழுதப்பட்ட இந்த கவிதை பல்வேறு விவாதங்களுக்கு ஆட்பட்டிருந்தாலும் இப்போது படிக்கும்போது எங்களின்  ஆயுளில் அந்த நிமிடங்கள்  ஆக்கி வைத்த மகத்தான நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன் சில நாட்களாக!

அந்தக்கவிதையை வரி மாறாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்!

எப்போதும் கவிதை செய் 
எப்போதாவது காதல் செய்! - ஜனார்த்தனம் 

*கவிதை ரோஜாக்களை 
கசக்கி...கசக்கி...
குப்பையில் எறிந்தவன் நான்.

*நான் 
 நடந்து செல்லும் 
பாதையெல்லாம் ...
பாதங்களெல்லாம் ...
கவிதை...ரோஜாக்களாய் 
இருந்திருக்கின்றன.

*நான் கூறும்போதெல்லாம் 
என் தோட்டம்
ரோஜா  மாலைகளாகவே 
மலர்ந்திருக்கின்றன.

*இப்போது மட்டும்...
இன்று மட்டும் ...
என் ரோஜாக்களில் 
அத்தர் இல்லை...
ஏனெனில் 
இது ...
மலர் உதிர் காலம்.

*வார்த்தைகள் 
வரமாய் 
விழுந்த ...
வசந்த காலத்தில் 
வாழ்ந்திருக்கிறேன்.

*இப்போது 
வார்த்தைகள்
வற்றிப்போன  
வனாந்தரத்தில் நிற்கிறேன்.

*சில வார்த்தைகளை 
உங்களுக்காய்  
செதுக்குகிறேன்.

*மனதை 
திறந்து வைத்துக்கொள்ளுங்கள் 
சன்னலை 
விரித்து வைத்துக்கொள்ளுங்கள்  
நிலவை ...
நித்திரைக்கு முன் வைத்துக்கொள்ளுங்கள்
வாழ்க்கையை 
வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்

எப்போதும் 
கவிதை செய்.
எப்போதாவது 
காதல் செய்! 




1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்... ரசித்தேன்... பாராட்டுக்கள்...

மிகவும் பிடித்த வரிகள் :

// மனதை
திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
சன்னலை
விரித்து வைத்துக்கொள்ளுங்கள்
நிலவை ...
நித்திரைக்கு முன் வைத்துக்கொள்ளுங்கள்
வாழ்க்கையை
வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் //

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

வலைப்பதிவு காப்பகம்