நாம் பேருந்து நிலையத்தில் ஒரு ஓரமாக நடக்கிறோம். நடக்கும் பாதையில் குப்பைகள், அசிங்கங்கள், சில நேரம் அந்த அசிங்கத்தின் மீது நடந்து விட நேர்கிறது, அந்த நேரம் பார்த்து பேருந்தில் இருந்து யாரோ ஒரு நல்லவர் வெற்றிலை குதப்பி நம் மீது துப்பி விடுகிறார்..அந்தக்கணத்தில் உடனே நாம் மனதிற்குள் செய்வது....கெட்டவார்த்தையில் திட்டுவது. வாய் வரை வந்த அந்த கெட்ட வார்த்தை மறுபடி வேறொரு உருவம் எடுத்து நம் நாகரிகத்தை பறை சாற்றுவோம். ஆனால் அந்த சம்பவத்திற்குப்பிறகும் வாய் வரை வந்து விட்ட கெட்ட வார்த்தையாலும் இன்னும் பிற வசை சொற்களாலும் திட்டிக்கொண்டிருப்போம்.
பெரும்பாலும் எங்கேயும் எப்போதும் இதைத்தான் செய்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு முகமூடி உடனே! இங்கேதான் சாரு சற்று வித்தியாசப்படுகிறார். (இயல்பாக இருப்பது கூட இங்கே வித்தியாசமகக்கொண்டாடப்படுகிறது) அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் எழுதுகிறார். அவர் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அதைத்தான் கதைகளாக்குகிறார். அல்லது என்ன விதமாக அவர் மனதில் படுகிறதோ அல்லது எந்த உணர்வில் எந்த வார்த்தையில் அவர் அதை உள்வாங்கிக் கொள்கிறாரோ அதை அப்படியே எழுதி விடுகிறார். இதுதான் அவரின் பலம் மற்றும் பலவீனம்!
இந்த அசாத்திய துணிச்சல் உங்களுக்கோ எனக்கோ வந்தால் சாருவின் வேலை அல்லது அவர் சொல்லவரும் கதைகள் அல்லது கட்டுரைகள் இன்ன பிற எழுத்து வடிவங்கள் - இவற்றிற்கு எந்த வேலையும் இல்லாமற் போய்விடும்!
சாருவின் எழுத்து நடை ஒருவருக்கு நல்லதா கெட்டதா என்று ஆராய்வதை விட அது ஏன் அப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று ஆராய்வது சாலச்சிறந்தது என்பேன். அது இன்னும் பல கேள்விகளை உருவாக்கும் இந்த சமூகத்திற்கு.
இந்த நாவல் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி எழுத்தாளர் தன் வலைத்தளங்களில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இது தமிழில் வெளிவந்த முதல் "Autofiction" நாவல் என்றும் அந்தந்த கதா பாத்திரங்களே தன் கதை பற்றி பேசும் என்றும் இது ஒரு பின் நவீனத்துவ நாவல் என்றும் இன்னும் ஏதேதோ...எனக்கு ஒரு வாசகனாக எதைப்பற்றியும் கவலை இல்லை, இது எல்லாம் தெரிந்து கொண்டுதான் படிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. அதே நேரம் இது பற்றி எல்லாம் தெரியாமல் படிக்கும் போதே அந்த எழுத்தின் வீச்சு நம்மை கிறங்கடிக்குமானால் அதுவே ஒரு எழுத்தாளனாக மிகப்பெரிய வெற்றி! அந்த வகையில் சாரு அனாயசமாக வென்று வாகை சூடி இருக்கிறார்!
நாவலின் கதையோட்டத்தையோ அல்லது அதன் சுருக்கத்தைப்பற்றியோ பேசுவதை விட அதில் வரும் பாத்திரங்கள் பற்றி பேசினால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
1 . பக்கிரிசாமி
இது ஒரு இடைச்செருகல் போலத்தெரிந்தாலும் "என் பெயர் பக்கிரிசாமி" என்று ஆரம்பிக்கும் அந்த பத்தியை நீங்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் இந்த நாவலை முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆட்படுவீர்கள். அது நிச்சயம்.
இந்தக்கதாபாத்திரம் சொல்லவரும் நிதர்சனமான உண்மை, உண்மைதானே. அதை யாரால் மறுக்க முடியும். இதே வருடத்தில் நடந்து முடிந்த ஒரு அரசியல் கூத்தின் ஒரு விதமான பிம்பமே இந்த பக்கிரிசாமி. இருந்தாலும் என்றென்றைக்குமான ஒரு அரசியல் பார்வை இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு தெள்ளிய நீரோடை போல (பாக்கியராஜின் திரைக்கதை போல) இந்த கதாபாத்திரம் தன் கதையை சொல்லச்சொல்ல நாம் எங்கேயும் போகாமல் நின்று கதை கேட்பது போலவே இருக்கிறது. இந்தப்பகுதியைப்படித்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் அந்த உரைநடை தந்த சுகமும் அதன் நீர் வீழ்ச்சி போன்ற வேகமான நடையும் அதன் உள் அர்த்தமும் அது சொல்ல வரும் சமூக முரண்பாடும் அரசியல் கோட்பாடும் ஒரு தனி மனிதனின் செல்வாக்கும் இன்னும் பல வருடங்கள் போனாலும் என்னால் மறக்கவே முடியாது.(இது எழுத்தாளருக்கு ஜால்ரா அடிப்பது அல்ல. படித்துப்பார்த்தால் நிச்சயம் நீங்களும் இதே போல் உணர்வீர்கள்) ஒரு முறை மனுஷ்யபுத்திரனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் சொன்ன அவர் "சாரு ஒரு சிறந்த உரையாடல்காரர்" என்று சொன்னார். அது உண்மை!
அதே போல இதை இந்த நாவலுக்குள்ளே செருகிய விதமும் நன்றாகவே இருக்கிறது. இந்த நாவலுக்குள்ள இன்னொரு சிறப்பு எந்தப்பகுதியையும் நீங்கள் தனித்தனி கட்டுரைகளாகவோ அல்லது இந்த நாவலின் ஊடே வரும் பகுதியாகவோ உங்கள் விருப்பம்போல் படிக்கலாம். எப்போது எப்படி படித்தாலும் நன்றாகவே இருக்கிறது.
2 . அஞ்சலி
இந்தகதையின் கதாநாயகி. தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நம் பக்கத்தில் நம் ஊரில் நம் சமூகத்தில் பல அஞ்சலிகள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அஞ்சலிக்கு நடப்பது போன்ற கொடுமைகள் அல்லது அதைவிட வதைக்குள்ளாகும் பெண்கள் இருக்கிறார்கள்.
அடக்கு முறை, குடும்ப வன்முறை, குழந்தைகளை வன்கலவிக்கு இரையாக்கும் சமூக விரோதிகள் என எல்லாம் இங்கே நாம் பார்த்துக்கொண்டிருப்பதுதான். ஆனாலும் நமக்கு நடக்காத வரை எதையுமே நாம் காது கொடுத்துக்கேட்பது இல்லை. அஞ்சலி மற்ற கதைகளில் வருவது போல புரட்சிக்கார பெண்ணோ அல்லது புதுமை செய்யும் பெண்ணோ அல்லது நவ நாகரிகத்தில் பிறந்து நம் கலாச்சாரத்தை சீர் குலைப்பைவளோ அல்ல. அவள் நம் பண்பாட்டில் பிறந்து, வளர்ந்த ஒரு சாதாரணப்பெண். ஆனால் அந்த பெண்ணுக்குத்தான் சோதனை. வேதனை அவர்களுக்குத்தானே வரும் இந்த ஆணாதிக்க சமூகத்தில்.
இதில் மிகப்பிடித்த ஒரு இடம் என்ன என்றால் அஞ்சலியின் எழுத்தாள நண்பன் உதயா, ஆரம்பத்தில் ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று ஆரம்பித்து போகப்போக அவனும் தானும் ஒரு ஆண்தான் என்று நிரூபிக்கிறான். அந்த இயல்புத்தன்மை மாறாமல் இருப்பதினால் இது நம் மனதுக்கு மிக நெருக்கத்தில் வந்து விடுகிறது.
3 . கொக்கரக்கோ
மிக நுணுக்கமான பாத்திரப்படைப்பு. ஆங்காங்கே நாம் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளையும் எழுத்தாளர் இந்த பாத்திரத்தின் மூலமாகவே கேட்டு விடுகிறார். இந்தப்பாத்திரத்தின் நையாண்டியும் நக்கலும்...simply superb!
4 . சுரேஷ்
அஞ்சலியின் கணவனாக இந்த பாத்திரம். நேரிடையாக நமக்கு எதுவும் இந்தப்பாத்திரத்தோடு சம்பந்தமில்லை என்றாலும் நம்மால் ஒதுக்கிவைக்க முடியாது. சுரேஷின் குணாம்சமாக சொல்லப்படும் எல்லாம் நம்மால் தள்ளி வைக்கமுடியாது. எதெல்லாம் உயர்ந்த குணமாக நாம் பாவிக்கிறோமோ
அதுவே தாம்பத்திய வாழ்வில் உறவில் விரசல் ஏற்பட போதுமான காரணிகளாக இருக்கின்றன.
5 . அஞ்சலியின் பெற்றோர் :
சுரேஷை எப்படி நாம் நிராகரிக்க முடியோதோ அப்படியே அஞ்சலியின் பெற்றோரும். நாம் கண் கூடாக காணலாம் பல குடும்பங்களில் இப்படிப்பட்டவர்களை. ஆனால் அவர்களின் செயல்பாடுகளுக்கு எந்தக்காரணங்களும் அஞ்சலி சொல்லாததால் அது நம் கற்பனைக்கும் அல்லது நடப்பு சூழலுக்கும் ஏற்றாற்போல் எது வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம்.
6 . திவாகர்:
இந்த பெயர் வரும்போதெல்லாம் நமக்கு எரிச்சல் வந்து விடுகிறது. அவன் செய்யும் செயலும் அஞ்சலியின் அம்மாவை கைக்குள் போட்டுக்கொண்டு அவன் அடிக்கும் லூட்டியும்...அவன் செய்யும் எல்லாம் அஞ்சலியை அடையும் ஒரே நோக்கத்திற்காகத்தான்" என்று அஞ்சலி சொல்லும் பொது நமக்கும் கண்களில் ஈரம் எட்டிப்பார்க்கிறது.
7. உதயா:
உதயா கதையின் நாயகன் என்பதால் வாசகர்களின் ரசனைக்கே நாம் விட்டு விடலாம். இருந்தாலும் பிடிக்காத ஒரு விஷயம்: அடிக்கடி தமிழ் எழுத்தாளன் ஆனதற்காக தன்னையே நொந்து கொள்வதும் சுய தம்பட்டமும் கடந்த நாற்பது வருடங்களாக தன்னை தமிழ் சூழலில் யாருமே கண்டு கொள்வதில்லை என்று கதறுவதும் தன் எழுத்தை தானே விமர்சனம் செய்து கொள்வதும்(உயர்ந்த விதமாய்) அங்கங்கே கெட்ட வார்த்தை விதைத்து விடுவதும் ஒரு வாசகனாக எனக்குப்பிடிக்கவில்லை. இருந்தாலும் இந்த நாவலின் பின் அட்டையில் இருப்பது போல இந்த கதாப்பாத்திரத்தை நாம் முழுவதுமாக புறக்கணிக்க முடியாது.
இது தவிர இந்த கதையில் நிறைய பேர் நடமாடுகிறார்கள்.அங்கங்கே தன்னை துண்டித்துக் கொள்கிறார்கள். ஏன் என்று தெரிய வில்லை. உதயாவின் நண்பனாக வரும் சிவா பற்றி நிறைய தகவல்கள் இருக்கிறது. இது கிளைமாக்சுக்காக வைத்தது போல் இருக்கிறது.
இது எல்லாம் விட இதில் இன்னொரு விஷயம் இந்தக்கதை ஆரம்பிக்கும்போதே கிளைமாக்சோடுதான் ஆரம்பிக்கிறது. இந்த நாவலுக்கு நிறைய கிளைமாக்சுகள் உண்டு. ஆனால் இது தவிர பல உருப்படியான தகவலும் இதில் உள்ளடங்கி இருப்பதால் இந்த புது முயற்சி பற்றி எதுவும் சிலாகிக்கத்தோன்றவில்லை.
பல தகவல்கள் அல்லது கட்டுரைகள் அல்லது பகுதிகள் ஏற்கனவே சாருவின் வலைத்தளத்தில் படித்ததுதான். அதனால் சில பகுதிகள் கொஞ்சம் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது. அதுவே இந்த நாவலுக்கு திருஷ்டியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
மற்ற படி விறுவிறுப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போகிறது.
மதன் புத்தக வெளியீட்டில் சொன்னதைப்போல "EXILE: The Sharp" . மிகச்சரியான பெயர் வைத்திருக்கிறார்!

4 கருத்துகள்:
நல்ல விரிவான ஷார்ப்பான விமர்சனம், நன்றிகள் பல
THELIVANA PAARVAI, NALLA VIMARSANAM, WISHES Thozha !
sharp aana vimarsanam... saru vaalka..! vaalththukkal
கருத்துரையிடுக