ஊசி!
இந்த நாலரை வயதில்
அப்போதுதான் முதன்முதலாய்
ஊசியைப்பார்க்கிறான்...!
அந்தப்பிஞ்சு கைகளில்
நரம்பைத்தேடித்தேடி
சிறிய ஊசியை
குத்த முயற்சித்தார்கள்...
ஒவ்வொரு நரம்பாய்
கண்டுபிடித்து அதைக்குத்துவதற்குள்
அழுது புரண்டு அடம்பிடித்து
ஊசியின் முனையை
நரம்புக்குள்ளேயே மடித்து
ரத்தம் வெளியில் பீய்ச்சி அடித்து
தன்னைத்தானே திமிறிக்கொண்டு....
அந்தக்கணம் எனக்கு இதயம்
வெளியில் வந்து போனது...!
ஐந்தாவதாய் ஒரு
நரம்பில் ஊசியைக் குத்தி
முடிக்கும்போது அவன்
தலைகீழாய் படுத்திருந்தான்...
அவனுக்கு ஆறுதல் சொல்ல
யத்தனித்த போது அவன்
கோபமாய் சொன்னது:
"ஏன் என்னை இங்க
கூட்டு வந்தீங்க?
மறுபடியும் இங்க கூட்டி வந்தீங்க
உங்களுக்கு ஊசி போட்ருவன்"...!
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்
விழி பிதுங்கி நின்ற நேரம்
என் தாயும் தகப்பனும்
கண் முன் வந்து போனார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக