செவ்வாய், பிப்ரவரி 01, 2011

பணயம்

அவன் ஏன் அப்படிசெய்தான் 
என்று எனக்குப்புரியவேயில்லை...

       இவன் மூன்றாவதா நான்காவதா
       மறந்துவிட்டேன் இருந்தாலும்       
       சபை நடுவே கேட்டார்கள் என்னை
      வெட்கமில்லாமல் சொன்னேன்
      அவனை "பிடித்திருக்கிறது" என்று.
      அந்தக்கேள்வி அவனிடமும் கேட்கப்பட்டது.
     அவன் எந்தச்சலனுமும் இல்லாமல்
     "அதை அவர்  முடிவு செய்வார்" என்று
     குடும்பத்தின் மூத்தவனை கைகாட்டினான்.   

அவன் ஏன் அப்படிச்சொன்னான் 
என்று எனக்குப்புரியவேயில்லை...

      இவனுக்கு இலையிட்டால்
     அடுத்தவனுக்குக் கொடுப்பானோ?
      கல்யாணம் ஆகாமலே கருச்சிதைவு
      ஆனதைப்போல என் உடலெங்கும் ரத்தவாடை!
     இந்த வார்த்தையை நம்பி நான்
    பணயம் வைக்கப்படவேண்டும்...ஒரு
    மீட்டெடுக்க முடியாத பயணப்பணயம்! 

அவன் ஏன் அப்படிச்சொன்னான்
என்று எனக்குப்புரியவேயில்லை...
        
         அதே கேள்வி அவனின்
        மூத்தவனிடம்  கேட்கப்பட்டது
        "அவனிடம் கலந்து பேசி
         தகவல் சொல்கிறோம்" என்றான்.
         நேர்த்திக்கடன் ஆடு போல தலையாட்டினேன்
         வெட்டப்படுவேன் எனத்தெரிந்திருந்தும்!

அவன் ஏன் அப்படிச்சொன்னான்
என்று எனக்குப்புரியவேயில்லை...
 
         பதிலுக்குக்காத்திருந்தோம்
         கைபேசிக்கு அழைத்தபோது
          தொடர்பு எல்லைக்கு வெளியில்
          உள்ளதாக  தகவல் வந்தது...!
          உள்ளே ஒன்று துருத்தியது
          ஒன்று என்னை துரத்தியது 
         போகும்போது என்னைக்கூப்பிடச்சொல்லி
          காத்திருந்து எனக்கு மட்டும் கேட்கும்படியாக
         "போய் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப்போனவன்...

ஏன் அப்படிச்செய்தான் என்று
இன்னும் எனக்குப்புரியவேயில்லை!       
                              
   
                 



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

panayam kooruvathu ennaku nadanthathaai ninaikum pothu athu en vaazhkai puthagathin mudinthu pona paagamaai ninaithu manathai aruthal paduthi kolgiren. athuvey samooga reethiyil nokinal pengal padum avalam solla mudiyatha vethanaiyai tharugirathu...itharku bharathi kanda puthumai pengalum vithi vilakalla enbathu innumoru vethanai!

வலைப்பதிவு காப்பகம்