சனி, ஜனவரி 29, 2011

மண்ணும் மண் சார்ந்த வீடும்...!

எது வீடு என்பதில் 
தீராத கேள்வி உண்டெனக்கு...!





     தை மாதத்தில் வாசல் 
    முழுதும் சாணமிட்டு 
    அழகாய் கோலமிட்டு
    சாணத்தின் மீது பூசணிப்பூச்சூடி...
    
    அந்தக்கூரை வீடு - 
    தாய் மாமனின் சீருக்குக்காத்திருக்கும் 
    பூப்படைந்த ஒரு பெண்ணைப்போல 
    நாணத்தோடு மண் பார்க்கும் அந்தக்காலை நேரம்...!


   சித்திரை மாதத்தில் 
  வெயிலுக்கு இதமாய் 
  ஒரு துண்டை மண் தரையில் விரித்து 
  கையால் தலையணை செய்து 
  ஒரு குட்டித்தூக்கம் போடும் நம்மோடு 
  சேர்ந்து போட்டி போட்டு 
  அந்தக்கூரை வீடும் தூங்கும் அந்த மதிய நேரம்...!


   ஆதி முதல் அந்தம் வரை 
  மண்புழுதி மணமணக்க விளையாடி 
  வீடு முழுக்க அழுக்காக்கி 
  அம்மாவிடம் அறை வாங்கி 
  பானையில் இருந்து தண்ணீரை 
   மொண்டு மொண்டு உடம்பில் ஊற்றி 
  தேய்த்தும் தேய்க்காமலும் 
  அரைகுறைக்குளியல் போட்டு 
  பாடம் படிக்கும் பொது 
   அந்தக்கூரை வீடும் நண்பனாகும் 
   அந்தி மயங்கும் நேரம்....!


   சுவற்றோடு கதை பேசி 
   அதன் கேள்விக்கு  பதில் சொல்லி 
   அதற்கு புரிய வைத்து 
   இல்லையென்றால் அதன் தலை மீது
   ஒரு கொட்டு வைத்து புரிய வைத்து 
     நான் தாலாட்ட அது தூங்க 
    நான் தூங்க அது தாலாட்ட 
   ஒரு காதல் நிவந்தம் செய்து கொண்டு 
   என்னோடு தூங்கிப்போகும் கொசு இல்லா 
   அந்தக்கூரை வீட்டின் இரவு நேரம்...!

எது வீடு என்பதில் இன்னும்
தீராத கேள்வி உண்டெனக்கு...!

-29.01.2011, இரவு 9.29 






 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்