நீயும் நானும் பேசித்திரிந்த - இந்த
மாமல்லபுரத்து வீதிகள்!அலைகளை எண்ணிக்கொண்டே
அமைதியாக இருந்த - இந்த
கடற்கரை மணல் வெளிகள்!
மகேந்திர வர்மரும் மாமல்லரும்
உட்கார்ந்து கனவு கண்ட - இந்த
சிற்ப மண்டபங்கள்!
சிவம் என்று சொன்னாலே - அது
அன்பே சிவம் அன்றி வேறில்லை
என்று சொல்லும் - இந்த
நாவுக்கரசர்!
உனக்கு நினைவிருக்கிறதா?
எனக்கு தேரோட்டினாய் - நீ
ஒரு சாரதியாய்!
எந்த போருக்கும் செல்லவில்லை - ஆனால்
நமக்குள் ரத்த சகதியாய்
முடிவில்லாத ஒரு போர்!
இந்த உலகத்தில் எதிரிகள்
இல்லாமல் போர் செய்தது நாம்தான்!
போரின் முடிவு உனக்கும் தெரியவில்லை -எனக்கும்
உண்மை புரியவில்லை!
ஒன்று மட்டும் ஆச்சர்யம் எனக்கு - நீயே
தேரை ஒட்டினாய்!
பின் எதற்கு இந்தப்போர் - என்று
நான் கேட்கவுமில்லை - நீ
சொல்லவுமில்லை!
இந்தப்போர் தேவையா என்று அர்ச்சுனன்
போல கேள்வி எழவில்லை - நீ
பார்த்தசாரதியாய் இருக்கையில்!
இன்றும் அந்த போரின் எச்சங்கள்
கம்பனின் கவிதையிலும் திருவாசகத்தின்
உருவகங்களிலும்!
இது ஒரு காலம்...!
இன்றும் இருக்கின்றன - அதே
மாமல்லபுரத்து வீதிகள் -
கடற்கரை மணல் வெளிகள் -
கடற்கரை கோயில்கள் -
சிற்பமண்டபங்கள் -
நாவுக்கரசரின் அமுத கானங்கள் -
எல்லாம் இருக்கின்றன நம் பெயரைச்சொல்லி!
இருந்தாலும் -
நீயும் நானும் கொல்லாமல் கொன்றுகொண்ட - ஒரு
போர் இல்லாமலே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக