கதையாடல் எனும் கலை!
நாம் எப்போதுமே கதைகளுக்கு அடிமை.
கதைகள் தான் நம்மை உய்விக்கின்றன . கதைகள் நம்மை வேறு உலகங்களுக்கு அழைத்துச்செல்கின்றன.. விதம் விதமாக கற்பனைகளைத்தூண்டிவிட்டு அந்த உலகங்கள் எங்கே இருக்கும் என நம் கனவில் நம்மை அலைக்கழிக்கவைக்கின்றன.
நாம் காதலிக்கிறோம். காதலிக்கப்படுகிறோம்.மிகப்பெரிய அரண்மனையில் ஒரு இளவரசனைப்போல் வாழ்கிறோம். போருக்குச்செல்கிறோம். நாம் மட்டுமே வெற்றி வாகை சூடுகிறோம். வெற்றியின் களியாட்டத்தில் நம்மை மறந்து முனகுகிறோம். வெற்றி...வெற்றி..வெற்றி...எங்கும் கூக்குரல்! மக்கள் கதைகதையாகச்சொல்கிறார்கள் நாம் எப்படி வெற்றி அடைந்தோம் என்பதை.
இப்படியெல்லாம் ஒரே கதையில், கிழிந்த பாயில் படுத்துக்கொண்டு, அம்மாவின் அணைப்பில் கதை கேட்ட அந்த இரவு...நாம்தான் அந்த நாட்டுக்கு ஒரே ராஜா. நாம் சொல்வதுதான் சட்டம்.நாம் தான் இனி எல்லாம். ஒரு நாடு எப்படி நாம் சொல்வது அத்தனையும் கேட்கும் என ஒரு கேள்வியும் எழாமல் ...தூங்கிய இரவுகள்... நம் எல்லோருக்குமே அந்த வாழ்க்கை இருந்தது நம் குழந்தைப்பருவத்தில்
பிறகு வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு...அந்தக்கதைகள்தான் அந்தக்கற்பனைத்திறன்தான் அநேக இடங்களில் நாம் வளர்வதற்கு தூண்டுகோலாக நின்றது.அந்த தைரியம்தான் ஒரு குழுவிற்கு மேலாளர்களாக வரவழைத்தது.
பிறகு அதே நிறுவனத்தைக்கட்டிக் காக்கும் பொறுப்பும் நம்மை வந்தடைந்தது. இல்லையென்றால் புதிதாக ஒரு நிறுவனத்தைத்துவக்குவதற்கு அடிகோலியது. நாம் வேலை செய்தது போய் அடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் மிகப்பெரிய சவால்களை மிகச்சாதாரணமாக செய்ய வைத்தது.
இப்படி நாம் அடுக்கிகொண்டே போகலாம்...நம் சாதனைகளை.இது எல்லாவற்றுக்கும் அடிப்படை கதைகள் கேட்டது. கதைகள் பார்த்தது. கதைகளில் பாத்திரங்கள் சிரித்தால் நாம் சிரிப்போம். அழுதால் நாம் அழுவோம். சவால் விட்டால் நாமும் பதிலுக்கு சவால் விடுவோம். சில சமயம் தைரியமாக இருப்போம். சில சமயம் பயந்தாங்கொள்ளியாக இருப்போம்.
எல்லா உணர்ச்சிகளும் நம்மை கடந்து சென்றன. வாழ்வியல் அர்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்த பிறகு, இந்தக் கதைகள் கொடுத்த தைரியம், நாம் துணிச்சலோடு சில முடிவுகளை எடுத்தோம்.
நம் பெற்றோர்களை பிரியும் நேரத்தில் நாமே அவர்களானோம்.
இது எல்லாமே கதைகள் கொடுத்த வரம் என்பேன். நம்மில் யார் கதை கேட்க விரும்புவதில்லை? நம்மில் யார் சில திரைப்படங்களில் கதாநாயகன் பேசுவதுபோல் பேசவில்லை?
நம் எல்லோருக்குமே கதைகள் அவ்வளவு பிடிக்கும்.
நம் அம்மாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், தாத்தாக்கள் எல்லாருமே நமக்கு ஒரு கதையாவது விட்டுவிட்டுப்போயிருக்கிறார்கள்.
அதைத்தான் அந்தக்கதையாடல்கள்தான் இப்போது மிகப்பெரிய சந்தைப்பொருள் ஆகி இருக்கிறது.
நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய கதையாடல்களைத்தான் தங்களின் முதல் மூலதனமாக நினைக்கின்றன.
இதைத்தான் நானும் உங்களுக்கு சொல்லப்போகிறேன். நான் மிக ஆர்வமாக இருக்கிறேன் கதை சொல்ல. நீங்களும் அதே ஆர்வத்தோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இதைப் பற்றி விரிவாக சொல்லப்போகிறேன்.
கதை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது?
----எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து
கதையாடல் எனும் கலை!